HT MP Story: ‘வெற்றி பெறுவாரா சசிகாந்த் செந்தில்!’ திருவள்ளூர் மக்களவைத் தொகுதி கள நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘வெற்றி பெறுவாரா சசிகாந்த் செந்தில்!’ திருவள்ளூர் மக்களவைத் தொகுதி கள நிலவரம்!

HT MP Story: ‘வெற்றி பெறுவாரா சசிகாந்த் செந்தில்!’ திருவள்ளூர் மக்களவைத் தொகுதி கள நிலவரம்!

Kathiravan V HT Tamil
Mar 30, 2024 06:10 AM IST

”கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் போட்டியிடும் தொகுதி என்பதால் இந்த முறை திருவள்ளூர் தொகுதி கவனம் பெற்றதாக மாறி உள்ளது”

திருவள்ளூர் தொகுதி கள நிலவரம்
திருவள்ளூர் தொகுதி கள நிலவரம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி!

1952அம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை இந்த திருவள்ளூர் தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு கலைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி மீண்டும் திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி உருவாக்கப்பட்டது. 

மரகதம் சந்திரசேகர் முதல் ஜெயக்குமார் வரை!

1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர், 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் வெற்றி பெற்று இருந்தனர்.

தொடர் வெற்றிகளை பெற்ற அதிமுக! 

2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் மருத்துவர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் 628,499 வாக்குகளை பெற்ற வேணுகோபால் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி என்ற பெருமையை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிகவின் ரவிக்குமார் 3,05,069 வாக்குகளை பெற்று இருந்தார். 

அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்!

ஆனால்  2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நிலைமை தலைக்கீழாக மாறியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயக்குமார் 767,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேணுகோபால், 4,10,337 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் லோகநாதன் 73,731 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வெற்றி செல்வி 65,416 வாக்குகளையும், பெற்று இருந்தனர். 

கவனம் பெற்ற சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்!

தற்போது நடைபெற உள்ளத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ நல்லத்தம்பியும், பாஜக கூட்டணியில் பாஜகவின் பொன்.பாலகணபதியும், மு.ஜெகதீஷ் சந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் போட்டியிடும் தொகுதி என்பதால் இந்த முறை திருவள்ளூர் தொகுதி கவனம் பெற்றதாக மாறி உள்ளது. திருவள்ளூர் மக்களவை தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது சசிகாந்த் செந்திலுக்கான பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் சசிகாந்த் செந்தில் பெறும் வாக்குகளுக்கு வலுசேர்க்கும் என சொல்லலாம். 

அதிமுகவின் நிர்வாக கட்டமைப்பும், திமுக ஆட்சி மீதான அதிருப்தியும் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பிக்கு சாதகமாக அமையும், வன்னியர் சமூகம் அதிகம் நிறைந்த திருவள்ளூர் தொகுதியில் பாமக கூட்டணியில் இருப்பது பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதிக்கு பலம் சேர்க்கலாம்.  புதிய தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை வலுப்படுத்தும். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.