HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2014!’ வடக்கே மோடி அலை! தெற்கே லேடி அலை! வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2014!’ வடக்கே மோடி அலை! தெற்கே லேடி அலை! வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல்!

HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2014!’ வடக்கே மோடி அலை! தெற்கே லேடி அலை! வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல்!

Kathiravan V HT Tamil
Feb 21, 2024 09:39 PM IST

“Lok sabha Election 2014: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசினாலும், பெரிய அளவில் எண்களை தரும் அளவுக்கு தமிழ்நாட்டில் எடுபடவில்லை!”

நாடாளுமன்றத் தேர்தல் 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014

இந்திய குடியரசு

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

அதிருப்தியை சந்தித்த 10 ஆண்டு ஆட்சி!

2004ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வரவேற்பு இருந்தததால், 2009 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. '

ஆனால் பிரச்னைகள் ஏதுமின்றி ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது காங்கிரஸ் கட்சிக்கு நெருப்பில் நடப்பதாக இருந்தது. 2ஜி, காமன்வெல்த் முறைகேடு, நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைக்கேடு என காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

அன்னா அசாரே போராட்டங்கள் 

ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரன்பேடி உள்ளிட்டோரின் போராட்டம், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்க கோரி நடைபெற்ற தனித் தெலங்கானா போராட்டம் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. 

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு எதிரான போராட்டங்களும், பரப்புரைகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை நாட்டில் ஏற்படுத்தியது. 

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி!

கோவாவில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்குழு கூட்டத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட நிலையில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என அக்கட்சி தலைமை விளக்கம் அளித்தது. 

காங்கிரஸை கழற்றிவிட்ட திமுக!

தேர்தலுக்கு சுமார் ஓராண்டு காலத்திற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகியது. 'கூடா நட்பு கேடாய் முடியும்’ அக்கட்சியின் பொதுக்குழுவின் கலைஞர் கருணாநிதி பேசியது பெரும் பேசுபொருள் ஆனது. 

நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை!

நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே நெம்பர் ஒன் மாநிலமாக உருவெடுத்துள்ளதாக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக பாஜக பரப்புரை செய்தது. 

அச்சு ஊடகங்கள் தொடங்கி வளர்ந்து வந்த சமூக ஊடகங்கள் வரை பாஜக தேர்தல் பரப்புரைகளை கவர்ச்சியான முறையில் பிரதமர் மோடியை முன்னிருத்தி செய்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆவேசம் மிகுந்த பேச்சு இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. 

தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு!

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக 40 தொகுதிகளிலும் எந்த கூட்டணியும் இன்றி தனித்து வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய திமுகவானது விசிக, புதிய தமிழகம், ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தனர்.  காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தினர். 

பிரதமர் ஆன நரேந்திர மோடி!

தேர்தல் முடிவில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 1989ஆம் ஆண்டு முதல் இந்தியாவில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை, முடிவுக்கு வந்தது. 

வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 37 தொகுதிகளை வென்ற அதிமுக, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக ஆனது. 

தமிழ்நாட்டில் எடுபடாத மோடி அலை!

நாடு முழுவதும் மோடி அலை வீடுவதாக சொல்லப்பட்டாலும், அது தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிதாக எடுபடவில்லை, ‘மோடியா? லேடியா?’  என்ற ஜெயலலிதாவின் பரப்புரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. திமுக கூட்டணி 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது,  தருமபுரியில் அன்புமணி ராமதாஸ்சும், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.  மத்திய இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணனும், நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக அதிமுகவின் தம்பிதுரையும் பொறுப்பேற்றனர். 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.