தமிழ் செய்திகள்  /  Elections  /  Ht Mp Story: Background On Central Chennai Parliamentary Constituency History And Candidates

HT MP Story: ‘தயாநிதி மாறன் தோற்பாரா?’ வரிந்து கட்டும் பாஜக! வாரும் தேமுதிக! மத்திய சென்னை தொகுதி கள நிலவரம்!

Kathiravan V HT Tamil
Mar 27, 2024 07:00 AM IST

”கடந்த தேர்தலில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்தனர்.”

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்கள்
மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி!

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவை தொகுதியாக மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி விளங்குகிறது. 

2009ஆம் ஆண்டுக்கு முன்னர்,  பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி இருந்தது. 

திமுகவின் கோட்டை!

இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 8 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.  அதிக பட்சமாக 1996, 1998, 1999 நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவின் முரசொலி மாறனும், 2004, 2009, 2019 ஆகியத் தேர்தல்களில் அவரது மகன் தயாநிதி மாறனும் வெற்றி பெற்று உள்ளனர். 

முதல் வெற்றியை சுவைத்த அதிமுக!

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை வீழ்த்தி அதிமுக முதல் வெற்றியை மத்திய சென்னை தொகுதியில் பதிவு செய்தது, அக்கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.விஜயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 

அனைவரையும் டெப்பாசிட்  இழக்க வைத்த தயாநிதி மாறன்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 448,911 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சாம்பால் 1,47,391 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 30,886 வாக்குகளையும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹ்லான் பாகவி 23,741 வாக்குகளையும் பெற்று இருந்தனர். இந்த தேர்தலில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்தனர். 

தற்போது யார்?

மத்திய சென்னை தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள தயாநிதி மாறனே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியும், பாஜக கூட்டணி சார்பில் வினோஜ் பி செல்வமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயனும் களம் இறங்குகின்றனர். 

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் கூட்டணியும் மத்திய சென்னை தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் ஓட்டுக்களும் தயாநிதிமாறனுக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. 

பாரம்பரிய தேமுதிக மற்றும் அதிமுக வாக்குகள் பார்த்த சாரதிக்கு பலம் சேர்க்கலாம். துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் நிறைந்து வாழும் வட இந்திய வணிகர்கள், தொழிலார்களின் வாக்குகள் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்திற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

WhatsApp channel