தமிழ் செய்திகள்  /  Elections  /  Ht Mp Story: Background On North Chennai Parliamentary Constituency History And Candidates

HT MP Story: ‘திமுகவின் கோட்டையில் ஓட்டை விழுமா?’ வடசென்னை தொகுதி களநிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 02, 2024 06:00 AM IST

”இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் அதிக பட்சமாக திமுக 11 முறையும், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும், அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது”

வடசென்னை தொகுதி கள நிலவரம்
வடசென்னை தொகுதி கள நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி!

தமிழ்நாட்டின் மிகப்பழமையான நாடாளுமன்றத் தொகுதியான வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. 

திமுகவின் கோட்டையான வடசென்னை!

இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் அதிக பட்சமாக திமுக 11 முறையும், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும், அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

அதிகபட்சமாக திமுகவின் சி.குப்புசாமி மூன்று முறையும், திமுகவின் கிருஷ்ணன் மனோகரன் மற்றும் என்.வி.என் சோமு, ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் ஆகியோர் தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 

முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக!

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெங்கடேஷ் பாபு வெற்றி பெற்றதன் மூலம் வடசென்னை வரலாற்றில் முதன் முறையாக அதிமுக வெற்றி பெற்றது. 

அமோக வெற்றி பெற்ற கலாநிதி வீராசாமி!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய மருத்துவர் கலாநிதி வீராசாமி 590,986 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ் 1,29,468 வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஜி மௌரியா 1,03,167 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட காளியம்மாள் 60,515 வாக்குகளை பெற்றார். 

தற்போது யார்?

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிட்டிங் எம்பியாக உள்ள மருத்துவர் கலாநிதி வீராசாமியே மீண்டும் திமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். 

அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஜெயபிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். 

வெற்றி யாருக்கு?

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை பொறுத்தவரை ஏற்கெனவே உள்ள சிட்டிங் எம்பி என்பதால் தொகுதிக்குள் நல்ல அறிமுகம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உட்பட மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்று உள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. வலுவான கூட்டணி, மத்திய அரசின் மீதான அதிருப்தி, ஆளும் கட்சி உள்ளிட்ட அம்சங்கள் கலாநிதிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. 

அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர். வடசென்னையில் நன்கு பரிட்சயமானவர் என்பது அவரது பலம், திமுக அரசின் மீதான அதிருப்தி உள்ளிட்டவை அதிமுகவுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. 

பாஜக வேட்பாளராக உள்ள பால்கனகராஜுக்கு மோடி ஆதரவு எண்ணம் கொண்டவர்களின் ஆதரவும், திமுக, அதிமுகவுக்கு மாற்று எதிர்பார்ப்பவர்களின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்கி உள்ள அமுதினி ஜெயபிரகாஷுக்கு புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. 

 

WhatsApp channel