HT MP Story: ‘கடலூரில் வெல்ல போவது பச்சானா! அன்புமணி மச்சானா!’ கள நிலவரம் இதோ!-ht mp story background on cuddalore parliamentary constituency history and candidates - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘கடலூரில் வெல்ல போவது பச்சானா! அன்புமணி மச்சானா!’ கள நிலவரம் இதோ!

HT MP Story: ‘கடலூரில் வெல்ல போவது பச்சானா! அன்புமணி மச்சானா!’ கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 03, 2024 06:00 AM IST

”இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது”

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ரூட்டி, கடலூர், குறிச்சிப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உளுந்தூர் பேட்டை, நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 

அதிகபட்சமாக 7 முறை வென்ற காங்கிரஸ்!

1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் என்.டி.கோவிந்தசாமி கச்சிராயர் வெற்றி பெற்றார். 

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

அமோக வெற்றி பெற்ற திமுக!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டிவிஆர்.ரமேஷ் குமார் 522,160 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 3,78,177 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தங்கவேல் 44,892 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சித்ரா 34,692 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.அண்ணாமலை 23,713 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

தற்போது யார்?

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிகவின் சிவகொழுந்து போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். 

கள நிலவரம்!

கடலூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் வென்ற திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டார். அதன் பிறகு அவரது ஆக்டிவ் பாலிடிக்ஸ் குறைந்துவிட்டது. தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சகோதரரும் கூட. , வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது, திமுக கூட்டணியில் உள்ளார் என்பதும் இவரது பலமாக உள்ளது. 

பாமக சார்பில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரை தாண்டி தமிழகம் முழுவதும் பிரபலம், நெய்வேலி என்.எல்.சி விவகாரம், முந்திரி மற்றும் பலா விவசாயிகள் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மக்களிடையே பெரும் மதிப்பை பெற்று தந்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சிவகொழுந்துவுக்கு தேமுக ஓட்டுக்களும், அதிமுகவின் கட்டமைப்பும் வலுசேர்ப்பதாக அமைகிறது. 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகனுக்கு முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.