HT MP Story: ‘அண்ணா பிறந்த மண்ணில் வெற்றி யாருக்கு?’ காஞ்சிபுரம் தொகுதி கள நிலவரம்!-ht mp story background on kanchipuram parliamentary constituency history and candidates - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘அண்ணா பிறந்த மண்ணில் வெற்றி யாருக்கு?’ காஞ்சிபுரம் தொகுதி கள நிலவரம்!

HT MP Story: ‘அண்ணா பிறந்த மண்ணில் வெற்றி யாருக்கு?’ காஞ்சிபுரம் தொகுதி கள நிலவரம்!

Kathiravan V HT Tamil
Apr 01, 2024 07:00 AM IST

”இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 5 முறையும், பாமக 2 முறையும், இந்திய குடியரசுக் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது”

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டுக்கு முன் இருந்த செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியாக மாறியது. 

செங்கபட்டு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அச்சரப்பாக்கம், உத்தரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், காஞ்சிபுரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 

அதிமுக, காங்கிரஸ் அதிக முறை வெற்றி!

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும்,  அதிமுக 5 முறையும், பாமக 2 முறையும், இந்திய குடியரசுக் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

செங்கல்பட்டு தொகுதியாக இருந்தபோது திமுகவின் சிட்டிபாபு இரண்டு முறையும், அதிமுகவின் காஞ்சி பன்னீர் செல்வம் இரண்டு முறையும், பாமகவின் ஏ.கே.மூர்த்தி இரண்டு முறையும் எம்.பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர். 

திமுக கூட்டணி இரண்டு முறை வெற்றி! 

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். 

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 684,004 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,97,372 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 வாக்குகளையும் பெற்று இருந்தனர். 

தற்போது யார்?

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வமே மீண்டும் களமிறக்கப்பட்டு உள்ளார். அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகரும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ஜோதி வெங்கடேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ் குமாரும் போட்டியிடுகின்றனர். 

திமுகவை பொறுத்தவரை தற்போது இருக்கும் கூட்டணி பலம் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறை வெற்றியும், ஒருமுறை தோல்வியும் அடைந்துள்ளதால் திமுக வேட்பாளர் செல்வத்திற்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் உள்ளது. மத்திய பாஜக அரசின் 10ஆண்டுகால அதிருப்தி திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். 

ஆளும் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அதிமுகவுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு மோடி ஆதரவு வாக்குகள் பலமாக இருக்கும். 

திராவிட மற்றும் தேசிய கட்சிக்களுக்கு மாற்று வேண்டும் என நினைப்பவர்கள், முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.