NTK: ’சீமான் இன்னும் ஒரு சீட்டு கூட ஜெயிக்கல! கூட்டணி வைச்சா சின்னம் தருவோம்!’ பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சவால்!
”Naam Tamilar Katchi: நாம் தமிழருக்கு போட்டியாக களம் காண்கின்றீர்களா என்ற கேள்விக்கு, நாம் தமிழர் கட்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது; நாங்கள் ஆல் இந்தியா பார்ட்டி. 13 மாநிலங்களில் எங்கள் கட்சி அமைப்புகள் உள்ளது ஏன கூறினார்”

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கள் கட்சி உடன் கூட்டணி வைத்தால் கரும்பு விவசாயி சின்னத்தை தருவோம் என்றும், இல்லை என்றால் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக போட்டியிடுவோம் என்றும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியிடம் இருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இந்த சின்னத்தோடு தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
ஏற்கெனவே சில மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி பரப்புரையை தொடங்கிவிட்டது. மீதம் உள்ள தொகுதிகளிலும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் அக்கட்சியின் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்படுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். தாமதம் செய்ததால் விண்ணப்பம் செய்த வேறு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி மனு செய்துள்ளது.
இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை வைத்துள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் ஜெயக்குமார் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வரும் தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும். குறைந்தது 10 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிற தொகுதிகளில் மூன்றாவது இடம் அல்லது நான்காவது இடம் கிடைக்கும் என கூறினார்.
விவசாய சின்னத்தை நீங்கள் கேட்டீர்களா? அல்லது தேர்தல் ஆணையமே கொடுத்ததா என்ற கேள்விக்கு, நாங்கள் விவசாயி சின்னம் உட்பட 10 சின்னத்தை கேட்டிருந்தோம்; அதில் இதை கொடுத்துள்ளனர் என்றார்.
நாம் தமிழருக்கு போட்டியாக களம் காண்கின்றீர்களா என்ற கேள்விக்கு, நாம் தமிழர் கட்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது; நாங்கள் ஆல் இந்தியா பார்ட்டி. 13 மாநிலங்களில் எங்கள் கட்சி அமைப்புகள் உள்ளது ஏன கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நாங்கள் கட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. எங்கள் கட்சியை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம்தேதி தொடங்கிவிட்டோம். சின்னம் வேண்டுமென்று டிசம்பர் மாதமே தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துவிட்டோம். திராவிட தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சி தொடக்கத்தில் சின்னம் கேட்டு எங்களிடம் பேசினர். ஆனால் அதற்கு எங்கள் அகில இந்திய தலைமை ஒத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீமான் வந்து கட்சி ஆரம்பிச்சி 15 வருஷம் ஆகிடுச்சி ஆனால் கரும்பு விவசாயிகள் சின்னத்தில் எந்த சீட்டும் ஜெயிக்கவில்லையே? என ஜெயக்குமார் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
