EPS vs Udhayanithi: ’நான் பல்ல காட்டுனேன்; நீ எதப்பா காட்டுற?’ உதயநிதிக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!
”எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நானும் பிரதமரும் அமரும் போது சிரித்தோம், அதை உதயநிதி கொச்சைப்படுத்தி உள்ளார். ஆனால் நீ பிரதமரோடு இருக்கும் போது எதை காட்டுகிறாய்?; நீ காட்டினால் சரி நான் காட்டினால் தப்பா?”
தூத்துக்குடியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியை பற்றி ஊடகம், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள், அம்மா அவர்கள் 2011 அமைத்த அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது ஆளுங்கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக தேமுதிகவும் உருவானது. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது இல்லை. விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் திமுகவுடன் ஐக்கியம் ஆகிவிட்டது.
அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறாது, 40 இடங்களிலும் திமுக கூட்டணிதான் வெல்லும் என்கிறார்கள். ஆனால் இந்த நாடாளுமன்றத்தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.
ஒரு புயலுக்கே தாக்குபிடிக்க முடியாமல் ஸ்டாலின் தடுமாறி போய்விட்டார். ஆனால் வர்தா புயல், தானே புயல், கஜா புயல் என புயலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுகதான்.
தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துவிட்டது. ஆனால் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை காக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனால் திறமையற்ற பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இதனால் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட பெருமழையால் தூத்துக்குடி மாநகரம் வெள்ளத்தில் மிதந்தது. அதை பார்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வராமல், டெல்லியில் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு சென்றார்.
ஸ்டாலின் பேசுகிறார், அதிமுக கள்ளக்கூட்டணி வைத்து இருக்கிறது என்று, அவருக்கு பழக்க தோஷம் போல் அவருக்கு இதுவரை எந்த கட்சி தலைவரும் ’கள்ளக்கூட்டணி’ என சொன்னது கிடையாது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உடன் மு.க.ஸ்டாலின்தான் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார். யாரை ஏமாற்றும் நாடகம் இது, நான் சிரித்தால் பல் தெரியும், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நானும் பிரதமரும் அமரும் போது சிரித்தோம், அதை உதயநிதி கொச்சைப்படுத்தி உள்ளார். ஆனால் நீ பிரதமரோடு இருக்கும் போது எதை காட்டுகிறாய்?; நீ காட்டினால் சரி நான் காட்டினால் தப்பா?
அதிமுகவை பொறுத்தவரை மறைமுகமாக யாருக்கும் ஆதரவு தரமாட்டோம். நாங்கள் நினைத்து இருந்தால் பாஜக உடன் கூட்டணி வைத்து இருப்போம், ஆனால் எங்களுக்கு பதவி ஆசை இல்லை. அனால் திமுகவுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். அதிமுகவுக்கு பதவி பெரிது அல்ல; மக்கள்தான் பெரிது.
தமிழ்நாட்டு மக்கள் உரிமையை அதிமுக காக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை பெறுவோம். சிறுபான்மை மக்களை பாதுகாப்போம் என்பதால்தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கிறோம்.
அதிமுக-பாஜக இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் 1999ஆம் ஆண்டு பாஜக உடன் திமுக 5 ஆண்டு காலம் கூட்டணியில் இருந்தது. முரசொலி மாறன் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருந்த போது ஓராண்டு காலம் இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் இருந்தார். ஆனால் அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் திமுக சென்றது. இதுதான் இவர்களின் கொள்கை கூட்டணி.
காங்கிரஸ் ஆட்சியில் எமெர்ஜென்சி கொண்டு வரும்போது திமுகவினரை சிறையில் அடைத்தார்கள். அவரை சிறையில் அடைத்த கட்சியோடு ஸ்டாலின் கூட்டணி வைத்து உள்ளார்.