Edapadi Palanisami: திருச்சியில் வரும் 24ஆம் தேதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி - திருப்புமுனை தருமா?
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Edapadi Palanisami: திருச்சியில் வரும் 24ஆம் தேதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி - திருப்புமுனை தருமா?

Edapadi Palanisami: திருச்சியில் வரும் 24ஆம் தேதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி - திருப்புமுனை தருமா?

Marimuthu M HT Tamil
Mar 18, 2024 09:13 PM IST

Edapadi Palanisami: மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இருந்து துவங்குகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்கட்டமாக வரும் மார்ச் 30ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் முதலாம் கட்ட தேர்தல் பரப்புரை பயணத்திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், ‘’வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், வரும் 24.03.2024 முதல் 31.03.2024 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவிக்கிறோம்.

அதன்படி, திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில், வரும் மார்ச் 24ஆம் தேதி மாலை 4 மணியளவில், நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோயிலில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 26ஆம் தேதி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், விவிடி சிக்னல், எம்.ஜி.ஆர் திடல், தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் இரவு 7 மணியளவில், வாகையடிமுனையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதன்பின், குமரி மக்களவைத் தொகுதியில் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில், நாகர்கோயில் நாகராஜா கோயில் திடலில், எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். அதன்பின், இரவு ஏழு மணி வாக்கில், சங்கரன்கோவிலில் 18ஆம் படி கருப்பசாமி கோயில் அருகில், தென்காசி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.

அதேபோல், வரும் மார்ச் 28ஆம் தேதி, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள சிவகாசிக்கும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள ராமநாதபுரம் அரண்மனை வாசலுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார்.

அதன்பின், வரும் 29ஆம் தேதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள மதுராந்தகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அதே நாளில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியைச் சார்ந்த பல்லாவரத்தில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.

மேலும், வரும் மார்ச் 30ஆம் தேதி புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், கடலூர் மக்களவைத் தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் தேதி, சிதம்பரம் மாலை 3.30வாக்கில், சிதம்பரம் பைபாஸில் தேர்தல் பரப்புரை செய்யும் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணி வாக்கில், மயிலாடுதுறையிலும், நாகப்பட்டினம் தொகுதிக்காக, இரவு 7:30 மணி வாக்கில் திருவாரூரிலும் பரப்புரை செய்கிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அதிமுக மக்களவைத்தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும்; அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் மார்ச் 24ஆம் தேதிக்கு முன்,  அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.