HT MP Story: ‘வீழ்த்த முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை! என்ன செய்ய போகிறது திமுக! தேனி தொகுதி நிலவரம் இதோ!’-ht mp story background on theni parliamentary constituency history and candidates - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘வீழ்த்த முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை! என்ன செய்ய போகிறது திமுக! தேனி தொகுதி நிலவரம் இதோ!’

HT MP Story: ‘வீழ்த்த முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை! என்ன செய்ய போகிறது திமுக! தேனி தொகுதி நிலவரம் இதோ!’

Kathiravan V HT Tamil
Mar 22, 2024 06:13 PM IST

”பெரியகுளம் தொகுதியாக இருந்த போது அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றிருந்தார்”

தேனி மக்களவை தொகுதி வரலாறு
தேனி மக்களவை தொகுதி வரலாறு

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தேனி நாடாளுமன்றத் தொகுதி!

பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த பகுதிகள் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு தேனி நாடாளுமன்றத் தொகுதி உருவானது. 

பெரியகுளம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 

தற்போது தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, தேனியில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 

அதிக வெற்றி பெற்ற அதிமுக!

பெரியகுளம் தொகுதியாக இருந்த போது அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.  1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றிருந்தார். 

தேனி தொகுதியாக மாறிய பிறகு, 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஜே.எம்.ஆரூணும், 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் பார்திபனும், 2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ஓபி.ரவீந்திரநாத்தும் வெற்றி பெற்றனர். 

அதிமுக மானத்தை காப்பற்றிய தேனி தொகுதி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், 504,813 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 428,120 வாக்குகளை பெற்றிருந்தார். 

அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 144,050 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாகுல் அமீது 27,864 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.ராதாகிருஷ்ணன் 16,879 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

தேனி தொகுதியில் யார் போட்டி?

தேனி தொகுதியை பொறுத்தவரை இந்த முறை திமுக நேரடியாக களம் இறங்குகிறது. அக்கட்சி சார்பில் தங்கத் தமிழ்ச் செல்வன் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி முன்னாள் காங்கிரஸ் ஜே.எம்.ஆரூண் மகனும், திமுக நிர்வாகியுமான இம்ரானும் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார்.  மேலும் கம்பம் செல்வேந்திரன், பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரது பெயர்களும் பேசப்படுகின்றன. 

அதிமுகவை பொறுத்தவரை ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.டி.கே ஜக்கையன் மற்றும் அவரது மகன் பால மணிமார்பன், ஜக்கையன், உசிலம்பட்டி மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் பேசப்படுகின்றன. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்துள்ள நிலையில் அவரது மகன் ஓபி.ரவீந்திரநாத் மீண்டும் தேனியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே டிடிவி தினகரன் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அமமுகவும் தேனி தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.