ADMK vs BJP: ’ஜூன் 4க்கு பின் அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லும்!’ அண்ணாமலை பேச்சால் பரபரப்பு!
“ADMK vs BJP: டிடிவி தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்து உள்ளது”
வரும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
அண்ணாமலை பிரச்சாரம்!
தேனியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டில் 283 பாராளுமன்ற உறுப்பினர்களையும், 2019ஆம் ஆண்டில் 303 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாஜக வென்றது, ஆனால் இப்போது 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் நமக்கு தேவை, அதில் நமது டிடிவி தினகரன் அண்ணனும் இருக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் அழைக்கிறேன் என்று சொல்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டை ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கு நிற்கிறோம்.
தேனியில் டிடிவி தினகரனும், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் அவர்களும் தேர்தலில் நிற்கின்றனர். மோடி 400 எம்பிக்களுடன் வர வேண்டும், அதே வேளையில் தமிழ்நாட்டில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவும், ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவும் தொண்டர்கள் வேறுவேறாக இருக்கலாம், ஆனால் தலைவர்கள் ஒன்றுதான்.
டிடிவி தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்து உள்ளது. அதிமுக தொண்டர்கள் வாக்கு டிடிவி தினகரனுக்குதான் விழும். பூச்சாண்டிகளையும், போலி தலைவர்களையும் யாராக இருந்தாலும் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் பாக்கி உள்ளது. அந்த வேலையை நாம் செய்தாக வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை காண்ட்ராக்டர்களுக்காக அதிமுகவை நடத்தி வருகிறார். அவர்களுக்கு கட்சியை தாரை வார்த்துவிட்டார். கிளாஸ் ஏ காண்ட்ராக்டர், மணல் கடத்துபவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான அதிமுகவினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அந்த தொண்டர்கள் அண்ணன் டிடிவி தினகரன் பின் அணிவகுத்து நிற்கப்போகிறார்கள். இது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நடக்கத்தான் போகிறது.
எதற்காக அதிமுகவில் இருந்து பாஜக விலகியது என்றால் 2019ஆம் ஆண்டில் அதிமுகவும், திமுகவும் இணைந்து பாஜகவை தோற்கடித்தார்கள். 2021ஆம் ஆண்டில் அண்ணன் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து இருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக ஆகி இருக்கமாட்டார். அதிமுக எந்த உண்மையான தலைவர் கையில் இருக்க வேண்டுமோ அதன் கையில் அதிமுக செல்லத்தான் போகிறது. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அண்ணன் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.
டாபிக்ஸ்