தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Pmk: ’சுயமரியாதைதான் முக்கியம்! அண்ணாமலை உடன் பிணக்கு? தேர்தல் பணிகளிலில் இருந்து விலகுவதாக கோவை பாமக அறிவிப்பு!’

PMK: ’சுயமரியாதைதான் முக்கியம்! அண்ணாமலை உடன் பிணக்கு? தேர்தல் பணிகளிலில் இருந்து விலகுவதாக கோவை பாமக அறிவிப்பு!’

Kathiravan V HT Tamil
Apr 12, 2024 05:00 PM IST

“வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம்.”

கோவையில் தேர்தல் பணிகளில் இருந்து பாமக விலகுவதாக அறிவிப்பு
கோவையில் தேர்தல் பணிகளில் இருந்து பாமக விலகுவதாக அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக-பாமக கூட்டணி

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இதன்படி தருமபுரி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையை பொறுத்தவரை திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். 

கோவை மாவட்டத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கோவை மாவட்ட தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ்  அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கூறி உள்ள அவர், வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என கோவை ராஜ் கூறி உள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை போட்டியிடும் கோவை தொகுதியில் தேர்தல் பணிகளில் இருந்து பாமக விலகி இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. 

WhatsApp channel