Ravichandran Ashwin: 100வது டெஸ்டில் களமிறங்கிய அஸ்வினுக்கு பாராட்டு! சிறப்பு மரியாதை - குடும்பத்தினர் நெகிழ்ச்சி
இன்று 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருக்கும் இந்திய ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை விளையாடியிருக்கும் 99 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் அவர் பேட்டிங்கிலும் 5 சதம், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இது இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கும் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
அதன்படி, 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14வது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன்னர் இமாச்சல பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் பனி படர்ந்த அழகான மலைத்தொடர் பின்னணியில் 100வது டெஸ்ட் போட்டி விளையாட இருக்கும் அஸ்வினுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100 என குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பு தொப்பியை அஸ்வினுக்கு பரிசளித்தார்.
இந்த நிகழ்வின்போது அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, மற்றும் குழந்தை உடன் இருந்தார்கள். அதேபோல் போட்டியில் களமிறங்குவதற்கு முன்னர் சக வீரர்கள் சிறப்பு மரியாதையும் செலுத்தினர். இந்த தருணம் அஸ்வின் மற்றும் குடும்பத்தாருக்கு நெகிழ்ச்சியை வரவழைக்கும் விதமாக அமைந்திருந்தது.