தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year: குரோதி புத்தாண்டை பார்த்து பயப்பட வேண்டுமா? சிறப்பு வழிபாட்டு முறைகள்.. கனி காண தயாராகுவது எப்படி

Tamil New Year: குரோதி புத்தாண்டை பார்த்து பயப்பட வேண்டுமா? சிறப்பு வழிபாட்டு முறைகள்.. கனி காண தயாராகுவது எப்படி

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 12, 2024 09:15 AM IST

Tamil New Year: சிவபெருமானை நன்றாக வணங்க வேண்டும். செவ்வாய்க்கு ராஜாவான முருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனீஸ்வரரின் பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். விபத்து பிரச்சனைகள் குறித்த அச்சம் உள்ளவர்கள் பைரவரை வணங்க வேண்டும்.

குரோதி புத்தாண்டை பார்த்து பயப்பட வேண்டுமா? சிறப்பு வழிபாட்டு முறைகள்.. கனி காண என்ன செய்ய வேண்டும்?
குரோதி புத்தாண்டை பார்த்து பயப்பட வேண்டுமா? சிறப்பு வழிபாட்டு முறைகள்.. கனி காண என்ன செய்ய வேண்டும்?

தமிழ்புத்தாண்டு 2024ல் ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு குரோதி ஆண்டாக பிறக்கிறது. இந்த ஆண்டு பிறப்பதற்கு முன்னதாகவே பலருக்கும் சிறிய பயம் உள்ளது.  கடவுளை மனதார வணங்குவதன் மூலம் அந்த அபாயங்களில் இருந்து நாம் விடுபடலாம். அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

தமிழ் ஆண்டின் வரலாறு

இடைக்காடார் என்ற சித்தர் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் எவ்வாறு இருக்கும் என்று எழுதி வைத்துள்ளார். அந்த வாக்கை அடிப்படையாக கொண்டே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கனி காண்பதற்கு வாங்க வேண்டிய பொருட்கள்

வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், எலுமிச்சை பழம், ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. வாய்ப்பு உள்ளவர்கள், ஆப்பிள், மாதுளை, கொய்யா, திராட்சை, அன்னாச்சிப்பழம் என தங்கள் வசதிக்கு ஏற்ப கனிகளை வாங்கி கொள்ளலாம். கனிகளோடு கொஞ்சம் பூக்களும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் இருந்து எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள்

பணம், நாணயங்கள், தங்க நகை, வெள்ளி நகை, தங்க காசு , வெள்ளிக்காசு என அவர் அவருக்கு வாய்ப்புள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதோடு வீட்டில் உள்ள மஞ்சள், குங்குமத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கனி தயார் படுத்துதல்

கனி காணும் தாம்பூல தட்டை நாளை (13.4.2024) இரவில் தயார் செய்ய வேண்டும். அந்த தட்டை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் மா, பலா, வாழை, எலுமிச்சை, பூ, மற்றும் உங்கள் வசதிக்கேற்ப பழங்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய கண்ணாடியையும் எடுத்து வைத்துகொள்ள வேண்டும். மேலும் அவர் அவர் வசதிக்கேற்ப தங்க நகை, தங்க காசுகள், ரூபாய் நோட்டுகள், நாணயம் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கனி காணும் தட்டை எங்கு வைக்க வேண்டும்.

முதல் நாள் இரவில் தயார் செய்த கனி காணும் தட்டை அவர் அவர் படுக்கை அறையில் எழுந்தவுடன் பார்ப்பதற்கு வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் கண்களை மூடி மனதார இறைவளை வேண்டி விட்டு பின்னர் கண்களை திறந்து கனிகளை பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் பார்க்க சொல்லலாம். 

பின்னர் குளித்து முடித்து எல்லோரும் கனி தட்டை பார்த்த பிறகு அதை பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம். வீட்டில் தனி தனி படுக்கை அறையை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு அறையிலும் ஒரு தட்டை தனித்தனியாக வைத்து கொள்ளலாம். பின்னர் காலையில் கடவுளுக்கு பாயாசம், சர்க்கரை பொங்கல் ஏதோ ஒரு நெய்வேத்தியம் வைத்து கடவுளுக்கு பூஜை செய்யலாம். 

பின்னர் அதில் இருந்த கனிகளை எடுத்து குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணலாம். அதில் வைத்த நகைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். பணக்கட்டில் உள்ள பணத்தை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சிறு பகுதியை கொடுத்து விட்டு மீதம் உள்ளதை பீரோவில், பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம்.

பூஜை நேரம்

இந்த ஆண்டு பூஜை செய்வதற்கான நல்ல நேரம் காலை 7.50 முதல் 9 மணி வரை ஆகும். இதை நாம் செய்யும் போது நமது குல தெய்வத்தையும் , இஷ்ட தெய்வத்தையும மனதார வணங்க வேண்டும்.

குரோதி ஆண்டுக்கான சிறப்பு வழிபாடு

குரோதி ஆண்டிற்கான ராஜாவாக வருவது செவ்வாய். செவ்வாய் என்றாலே சூடு. அதனால்தான்இந்த ஆண்டு விபத்துகளும் தீயினால் வரும் பிரச்சனைகளும் அதிகம் இருக்கும் என்று எல்லோரும் பயப்படுகின்றனர். இந்த செவ்வாய்க்கு மந்திரியாக வருபவர் சனீஸ்வரர். இதனால் தான் குரோதி ஆண்டை பார்த்து எல்லோரும் மிகவும் பயப்படுகின்றனர்.

இதனால் சிவபெருமானை நன்றாக வணங்க வேண்டும். செவ்வாய்க்கு ராஜாவான முருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். சனீஸ்வரரின் பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். விபத்து பிரச்சனைகள் குறித்த அச்சம் உள்ளவர்கள் பைரவரை வணங்க வேண்டும். மேலும் நர சிம்ம மூர்த்தி வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். அம்மனையும் ஆண்டு முழுவதும் வழிபட்டால் இந்த ஆண்டு வரக்கூடிய பிரச்சனைகள் இறை அருளால் நம்மை விட்டு விலக வாய்ப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel