Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!
May 05, 2024, 11:01 AM IST
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரண வாக்குமூலம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமார் மரண வாக்குமூலம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளயிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கடந்த 30 ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் மனு ஒன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்ததாகக் கூறி சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இதுகுறித்து கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.
கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை ஆஜர் செய்தார். அந்த கடிதத்தில் 30.04.2024 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம், அவர் புகாரளித்த போதுதான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் அவரது உடலை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இன்று ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில், இறுதி சடங்கிற்கு பின் அடக்கம் செய்யப்படுகிறது.
முன்னதாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரை இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்