Actor Pandu Memorial Day: ‘ஆங்’ என்ற மேனரிசத்தால் ஈர்த்த நடிகர் பாண்டு.. மறுபக்கம் இரட்டை இலையை வடிவமைத்தவர்!
May 06, 2024, 08:56 AM IST
Actor Pandu Memorial Day: நடிகர் பாண்டுவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Actor Pandu Memorial Day: நடிகர் பாண்டு, தனது ‘ஆங்’ என்று சொல்லும் மேனரிசத்தால் தமிழ் மக்களிடையே தனித்த புகழைப் பெற்றார். திரைப்படங்களில் காமெடி மற்றும் துணைநட்சத்திரங்களில் நடித்த பாண்டு, அடிப்படையில் ஒரு கிராஃபிக் டிசைனர் ஆவார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தவர். இவரைப் பற்றி நம்மிடம் அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த நடிகர் பாண்டு?: பாண்டு, 1947ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி குமாரபாளையத்தில் பிறந்தவர். இவரது அண்ணன் தான், சினிமாவில் பிரபலமான காமெடியன் இடிச்சபுளி செல்வராஜ் ஆவார்.
சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் திறமைமிக்க பாண்டுவை, அவரது ஆசிரியர் ஓவியம் படிக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.
பள்ளிப் படிப்பு முடித்த கையோடு, ஐந்தாண்டு ஓவியம் தொடர்பான டிப்ளமோ படிப்பு பற்றி அறிந்ததும், முதலில் அதனைப் படிக்கத் தயங்கிய அவர் பின் ஆசிரியரின் அறிவுரையால் அதற்கான நுழைவுத்தேர்வில் கலந்துகொண்டு வென்றார். பின், இவருக்கு குஜராத் மாநிலம், பரோடாவில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ’’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்’’ என்ற கல்லூரியில் அரசின் ஸ்காலர்ஷிப்போடு முதுகலைப் படித்தார். பின், இவருக்கு ஃபிரான்ஸில் ஓவியம் மற்றும் டிசைனில் முனைவர் பட்டம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் இந்திய அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப்போடு. படித்து முடித்து வெளியில் வந்த பாண்டு, ’’கேபிடல் லெட்டர்ஸ்’’என்னும் கிராஃபிக் டிசைனிங் கம்பெனியைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் தன் மகன்களான பிண்டு, பிரபு, பஞ்சு ஆகியோருடன் இணைந்து நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளை வடிவமைத்து தரும் பணியைச் செய்தார். மேலும், ’பிரபாஞ்ச்’ என்ற பித்தளை மற்றும் அலுமினிய தொழிலையும் தொடங்கி, அதையும் சக்ஸஸ்ஃபுல்லாக நடத்தினார்.
முக்கிய லோகோக்களில் பாண்டுவின் பணி: தமிழ்நாடு சுற்றுலா சின்னமாகத் தற்போது திகழும் குடையை வடிவமைத்தவர், பாண்டுதான். இதனை வடிவமைத்தமைக்காக 1960களில் ரூ.20ஆயிரம் என்னும் மிகப்பெரிய ரொக்கப் பரிசைப் பெற்றார். இவரது அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ் நடிகர் ஆவதற்கு முன், எம்.ஜி.ஆரின் உதவி இயக்குநராக இருந்தார். அப்போது கிடைத்த அறிமுகத்தில் அதிமுக கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியைப் பாண்டுவிடம் ஒப்படைத்தார், எம்.ஜி.ஆர். அந்த வாய்ப்பு கிடைத்தபோது மணி இரவு 10 மணி இருக்கும் என்றும்; அதனை ஒரு மணி நேரத்துக்குள் முடித்ததாகவும் பாண்டு பின்னர் கூறினார். மேலும் சன் டிவியின் லோகோ, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் லோகோ பாண்டுவால் வடிவமைக்கப்பட்டன.
திரைப்பிரவேசம்: 1970இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'மாணவன்’ படத்தில் கல்லூரி மாணவனாக தோன்றி தனது திரைப்பயணத்தை தொடங்கினார், பாண்டு. 1981ஆம் ஆண்டுக்குப் பிறகு முழு நேர நடிகராக மாறிய பாண்டு ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போது முன்னணியில் இருந்த நடிகர்களின் படங்களில் தொடங்கி, விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், விக்ரம், தனுஷ், சிம்பு வரை காமெடி வேடங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
பாட்டுக்கு நான் அடிமை, சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, நாட்டாமை என ஏராளமான ஹிட் படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்தார். இவரது வசன உச்சரிப்பும், நடிப்பும் தனித்தன்மை வாய்ந்தது.
மீம்களில் வாழும் இந்த கால ஜெனரேஷன்களுக்கு புரியும்படியாக சொல்வதென்றால் ’ஆஹான்’ என்ற வடிவேலு நினைவுக்கு வருவது போல், ’ஆங்ங்’ என்ற வார்த்தை பாண்டுவுக்கான டிரேட்மார்க்காக இருந்து வருகிறது. அதேபோல் ’’தம்பீ’’ என இழுத்தவாறு இவர் பேசும் வசன உச்சரிப்புக்கே சிரிப்பு வருவதை கட்டுப்படுத்த முடியாது.
கொரோனா இரண்டாம் அலையின்போது நோய் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான பாண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் மே 6, 2021இல் உயிரிழந்தார். நடிகர் பாண்டுவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளில், அவரது காமெடி மேனரிஸத்தை நினைத்துப் பார்த்து, அஞ்சலி செலுத்துவோம்.
டாபிக்ஸ்