தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Rm Veerappan: ’திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர்! தூது போன ஆர்.எம்.வீ! கலைஞர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

RIP RM Veerappan: ’திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர்! தூது போன ஆர்.எம்.வீ! கலைஞர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Kathiravan V HT Tamil
Apr 09, 2024 04:31 PM IST

”பெரியார், அண்ணா காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன் என கலைஞர் கருணாநிதி கூறி உள்ளார்”

ஆர்.எம்.வீ குறித்து கலைஞர் கருணாநிதி பகிர்ந்த நினைவுகள்
ஆர்.எம்.வீ குறித்து கலைஞர் கருணாநிதி பகிர்ந்த நினைவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

எம்ஜிஆர் அமைச்சர் அவையில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 98ஆவது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?

ஆர்.எம்.வீ என அறியப்படும் ஆர்.எம்.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் பிறந்தவர். இளம் வயது முதலே திராவிட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த வீரப்பன், காரைக்குடி ராமசுப்பையா மூலமாக பெரியாருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் பெரியார் உடன் ஈரோடு சென்று பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு திராவிட இயக்கத் தலைவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது.

கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்த கிருஷ்ணன் நாடக கம்பெனியில் மேற்பார்வையாளராக சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், அறிஞர் அண்ணாவின் அபிமானியாக மாறினார்.

எம்ஜிஆரின் உதவியாளர் முதல் அமைச்சர் வரை!

1953ஆம் ஆண்டு எம்ஜிஆரின் உதவியாளராக சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், விரைவில் அவரது நம்பிக்கைக்கு உரியவராக மாறி அவரது கணக்காளராக உயர்ந்தார்.

1956ஆம் ஆண்டு அவரது திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் பேரறிஞர் அண்ணா நடத்தி வைத்தார்.

எம்ஜிஆரின் திரைப்பட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், தீவிர எம்ஜிஆர் ஆதரவாளராக அறியப்பட்டார்.

1972ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்னர், அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய எம்ஜிஆருக்கு ஆர்.எம்.வீரப்பன் பக்கபலமாக இருந்தார்.

1977 முதல் 1996 வரையில் அமைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசுகளில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொடர்புத்துறை, உள்ளாட்சித் துறை, கல்வித்துறை உள்ளிட்ட இலாகாகளை ஆர்.எம்.வீரப்பன் கவனித்து வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் சட்ட மேலவை உறுப்பினராகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது.

ஜெயலலிதாவுடன் பிணக்கு!

1987ஆம் ஆண்டில் எம்ஜிஆர் மறைந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அம்மையாரை தீவிர அரசியலுக்கு அழைத்து வந்ததில் ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி என்றும், ஜானகி தலைமையில் ஜா அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

1989ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு ஒருங்கிணைந்த அதிமுக உருவானபோது ஜெயலலிதா தலைமையை ஏற்றார்.

1996ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி எம்ஜிஆர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி ஆர்.எம்.வீரப்பன் நடத்தி வருகிறார். 2004ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களில் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது.

ஆர்.எம்.வீ குறித்து கருணாநிதி கருத்து!

பெரியார், அண்ணா காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன் என அவரது 81ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி கூறி இருந்தார். 

1972ல் கட்சியின் பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் நீக்கப்பட்டதால் திமுக பிரச்சனைகளை எதிர்கொண்டபோது, கட்சியின் ஒற்றுமையில் அக்கறை கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திரு.வீரப்பன் அவரது வீட்டிற்கு வந்து கெஞ்சினார்.

இருப்பினும், சிலர் அத்தகைய வாய்ப்பை மறுத்துவிட்டனர். அப்போது திரு.வீரப்பனைக் கடுமையாக நடத்தியவர்களில் ஒருவர், மூன்று மாதங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் கட்சிக்குத் தாவினர் என கலைஞர் கருணாநிதி கூறி இருந்தார். 

IPL_Entry_Point