Vikravandi By-Election: தேர்தல் புறக்கணிப்பு ’பாஜகவுடன் கள்ள உறவில் அதிமுக!’ ஈபிஎஸை விளாசும் விசிக வன்னி அரசு!
Vikravandi By-Election: ”5 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். ஆனால், அடுத்து வந்த திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பங்கேற்பதாகவும் இனி இடைத் தேர்தல்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் அம்மையார் ஜெயலலிதா அறிவித்திருந்தார்”
பாஜகவுக்கு ஆதரவாகவே விக்கிரவாண்டி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளதாக விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக ஏப்ரல் 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 10-இல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
இந்த நிலையில் வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று (ஜூலை 14) தொடங்கி உள்ள நிலையில், வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வரும் ஜூன் 24ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், ஜூன் 26ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என்றும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள்
இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அன்னியூர் சிவாவும், பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலை புறக்கணித்த அதிமுக
இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “"அராஜகம் என்றால் திமுக; திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். விடியா அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்.
பாஜகவுக்கு அதிமுக மறைமுக ஆதரவு?
அதிமுகவின் இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”அதிமுக ஒரு மாநில கட்சி மட்டுல்ல; மாநிலத்தில் திமுக போன்றே வாக்கு வங்கி அதிகம் கொண்ட கட்சி. நடைபெறப்போகும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தமிழ்நாட்டில் இதற்கு முன் அதாவது, 2009 ஆண்டு நடைப்பெற்ற தொண்டாமுத்தூர், பர்கூர், கம்பம், இளையான்குடி, ஶ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். ஆனால், அடுத்து வந்த திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பங்கேற்பதாகவும் இனி இடைத் தேர்தல்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் அம்மையார் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஜெயலலிதா வழியில் நடப்பதாக சொல்லும் திரு. எடப்பாடியார் அவர்கள் அம்மையாருக்கு எதிரான முடிவை எடுத்து மீண்டும் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளார். இதுவரை இடைத்தேர்தல்களை புறக்கணித்தே வந்த பாமக விக்கிரவாண்டியில் போட்டியிட முடிவு செய்தமைக்கும், அதிமுக புறக்கணித்தமைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவே சொல்ல முடியும். அதிமுகவின் இந்த புறக்கணிப்பு முடிவு மறைமுகமாக கூட அல்ல; நேரடியாகவே பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை ஆதரிப்பதாகவே பொருள். பாஜக- அதிமுகவின் கள்ள உறவை விக்கிரவாண்டி தொகுதி மக்கள் புரிந்து கொண்டு திமுகவுக்கே வாக்களிப்பது உறுதி. இப்போதே திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.” என பதிவிட்டு உள்ளார்.