தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வினாத்தாள் பார்சல் மாற்றம்: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி!

வினாத்தாள் பார்சல் மாற்றம்: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி!

Priyadarshini R HT Tamil
Feb 25, 2023 12:28 PM IST

TNPSC Group 2 : இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு மையங்களில் வினாத்தாள் மாறிவிட்டதால் மாணவர்கள் பதற்றமடைந்தனர். வினாத்தாள் பார்சலில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த குளறுபடி நடந்துள்ளது.

திருச்சி ஈவெரா கல்லூரி மையத்தில் தேர்வு துவங்கும் முன் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்து தேர்வை துவங்கி வைத்த கலெக்டர் பிரதீப்குமார்.
திருச்சி ஈவெரா கல்லூரி மையத்தில் தேர்வு துவங்கும் முன் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்து தேர்வை துவங்கி வைத்த கலெக்டர் பிரதீப்குமார்.

ட்ரெண்டிங் செய்திகள்

காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியத்தில் பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் காலையில் நடைபெற்ற தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.   

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் பார்சலில் சீரியல் எண்கள் மாறிவிட்டாதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதமாகிறதோ அவ்வளவு கூடுதல் நேரம் வழங்கப்படும். சில மையங்களில் சிக்கல் சரிசெய்யப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. சில மையங்களில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல மைங்களிலும் இதே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில், எங்கு புகார் என்பது குறித்து விரிவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த மையங்களில் தேர்வு தாமதமாக தொடங்குகிறதோ அந்த மையங்களில் எத்தனை நிமிடங்கள் தாமதமாக தொடங்குகின்றதோ அதற்கான கூடுதல் நேரம் வழங்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் தேர்வு எழுத காலையில் சுமார் 2000 மாணவர்கள் வந்திருந்தனர். காலை ஒன்பரை மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு தாமதமாக துவங்கியது. தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு எழுதும் அறை முறையாக ஒதுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அங்கு எழுந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து தேர்வரகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

சிதம்பரம் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 252 பேர் தேர்வு எழுத வந்தனர். தேர்வு எழுதுவதற்காக தேர்வு அறைக்கு வந்த அவர்களுக்கு வினாத்தாள்கள் மாற்றி கொடுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் திடீரென வெளியே வந்தனர். தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் சிவகுமார் தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தேர்வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வினாத்தாள் பண்ட்ல் சீரியல் நம்பர் குழப்பத்தால் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர. தொடர்ந்து அங்கும் நிலைமை சரிசெய்யப்பட்டது. 

திருநெல்வேலி மாநகரத்தின் 26 தேர்வு மையங்களில் 4520 பேர் குரூப் 2 மெயின் தேர்வு இன்று எழுதுகின்றனர்

திருநெல்வேலி மாநகரத்தின் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக தேர்வுகள் துவங்கியது. இதனால் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி விருதுநகர் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத வந்த தேவர்கள் தேர்வு துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதிருப்தியடைந்தனர்.   

பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வு இருக்கும் நிலையில் தாமதமாக தேர்வு துவங்கியதால் கூடுதல் நேரம் கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள நிலையில் மதிய இடைவேளை குறைவாக இருக்கும் என்றும் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருச்சி ஈவெரா கல்லூரியில் தேர்வெழுத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். அவர்களுக்கும் சரியான நேரத்தில் வினாத்தாள்கள் கிடைக்காததால், தேர்வர்கள் பதற்றமடைந்தனர். இதுகுறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டனர். அவர்களும் சரியான பதில் கூறாததால், மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த பெற்றோரும் கல்லூரியை முற்றுகையிட்டனர். உடனடியாக கலெக்டர் பிரதீப் குமார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமானப்படுத்தி, மாணவர்களை தேர்வு எழுத வைத்தார்.   

இதேபோல் தஞ்சையில் பாரத் கலை அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி, சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 

பாரத் கல்லூரியில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களின் சீரியல் எண் மாறியிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கவில்லை. தகவலறிந்து வந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் அங்கு நிலைமையை சரிசெய்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்