Selvaperunthagai: ’தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கலாட்டா!’ செல்வப்பெருந்தகை பல்டி! கூட்டணியை உடைக்க முடியாது என பதில்!
TNCC President Selvaperunthagai: இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டுமென்று கூறினேன்.

எஃகு கோட்டை போல் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மு.க.ஸ்டாலின் பங்களிப்பை பாராட்டினோம்
அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், ‘கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.