MK Stalin Press Meet: “தனி பெரும்பான்மை இழந்த பாஜக”! பிரதமர் வேட்பாளாரா நான்? கலைஞர் சொன்ன பதிலை கூறிய மு.க. ஸ்டாலின்
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, ஒரு வித பிம்பத்தை ஏற்படுத்தி, ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பெறாத அளவில் தற்போது பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்த வெற்றியை தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன். அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் 39 மற்றும் புதுச்சேரியில் இருக்கும் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 2004 தேர்தலுக்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் 40 தொகுதிகளையும் திமுக வென்றுள்ளது.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
"கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியும் சேர்த்து 40க்கு 40 என தமிழ்நாடு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, தங்களுக்கு யாருமே எதிரிகள் இல்லை என்ற கட்டமைப்பை பாஜக அமைத்தனர். ஒரு வித பிம்பத்தை ஏற்படுத்தினார்கள்.
தனி பெரும்பான்மை பெறாத நிலையில் தள்ளப்பட்ட பாஜக
ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பெறாத அளவில் தற்போது பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை இப்படித்தான் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு நாள்களுக்கு முன்னர் கருத்து கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை பாஜக தொடுத்தது. ஆனால் தேர்தல் முடிவு அரசியல் சாசனத்தை மாத்திடலாம், வெறுப்பு பரப்புரையால் மக்களை பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பாஜவுக்கு எதிராக மக்களின் இந்த தீர்ப்பு தான் எங்கள் கூட்டணியின் வெற்றி.
பாஜக பணபலம், அதிகார துஷ்பிரோகம், ஊடக பரப்புரை என எல்லாவற்றையும் உடைத்து எரிந்து பெறப்பட்டிருக்கும் இந்த வெற்றி மகத்தான, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்.
தேர்தல் வெற்றி கலைஞர் கருணாநிதிக்கு காணிக்கை
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு இது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என சொல்லியிருந்தேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளை கடந்த மாநில கட்சியாக இருக்கும் திமுகவின் இந்த தேர்தல் வெற்றியை, இந்த இயக்கத்தை 50 ஆண்டு காலம் கட்டி காத்த தலைவர் கலைஞருக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்தியாவைக் காப்போம் என்ற உறுதிமொழியை வழங்கி, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி.
டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
என் உயரம் எனக்கு தெரியும்
தொடர்ந்து ஸ்டாலினிடம், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "ஏற்கெனவே பலமுறை இதற்குப் பதில் அளித்துவிட்டேன். கலைஞர் சொன்னது தான். என் உயரம் எனக்குத் தெரியும்" என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்