Vikravandi By Election : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு!
Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்,” வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலானர்) அவர்கள் போட்டியிடுவார்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக ஏப்ரல் 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புகழேந்தி மறைவு
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார்.