தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tn Transport Workers Strike Withdrawn On Today

TN Bus Strike: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

Karthikeyan S HT Tamil
Jan 10, 2024 03:54 PM IST

தமிழக போக்குவரத்து தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசு பேருந்து (கோப்புபடம்)
அரசு பேருந்து (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளன. இதையடுத்து அரசு பேருந்து ஊழியா்களின் போராட்டம் வரும் 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தைத் கைவிட்டு, நாளை உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது. பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது, நாளை முதல் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு முழுமையாக பணிகளை ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.

மேலும், ஜனவரி 19ஆம் தேதி வரை போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைக்கிறோம் எனவும் உயா் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

முன்னதாக, தமிழக போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19ஆம் தேதி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்தன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (டிச.9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.  தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கருடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்