தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin: அமைச்சர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட ஆவின் அதிகாரிகள்.. கொதிக்கும் பால் முகவர்கள்!

Aavin: அமைச்சர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட ஆவின் அதிகாரிகள்.. கொதிக்கும் பால் முகவர்கள்!

Karthikeyan S HT Tamil
Jul 05, 2023 11:24 AM IST

ஆவின் நிறுவனத்தை சீர்படுத்த நாங்கள் ஏற்கனவே வழங்கிய ஊழல் அதிகாரிகள் பட்டியல் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை ஆவினில் இருந்து களையெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆவின் பால் மொத்த கொள்முதல் நிலையம், மாதவரம்
ஆவின் பால் மொத்த கொள்முதல் நிலையம், மாதவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

அவ்வாறு பால் பாக்கெட்டுகள் அடுக்கப்பட்டுள்ள கிரேடுகளை ஏற்றுவதற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும், கிரேடுகளில் அடுக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக கருதப்பட்டு அங்கே செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி விநியோக வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களைத் தவிர மொத்த விநியோகஸ்தர்களின் உரிமையாளர்களோ அல்லது அவர்களின் அலுவலக பணியாளர்களோ அலுவலகங்களை தவிர பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சென்னையில் உள்ள சுமார் 55 மொத்த விநியோகஸ்தர்களில் சர்வ வல்லமை பொருந்திய மொத்த விநியோகஸ்தராக திகழும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் பெயரில் ஆவின் பால் விநியோக உரிமம் பெற்றுள்ள வடசென்னையைச் சேர்ந்த சக்திவேல் ஏஜென்சி உரிமையாளர்கள் மாதவரம் பால் பண்ணையையே தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதையும், மொத்த விநியோகஸ்தர்களின் உரிமையாளர்களோ அல்லது அவர்களின் அலுவலக பணியாளர்களோ பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே செல்ல அனுமதியில்லை எனும் போது சக்திவேல் ஏஜென்சி உரிமையாளர்கள் மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கே சென்று பால் பண்ணை உரிமையாளர்கள் போல் நடந்து கொள்கின்றனர் இதனால் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும், அவர்கள் மாதவரம் பால் பண்ணையில் தினசரி மாலையில் இருந்து பால் பாக்கெட்டுகள் உற்பத்தி தொடங்கி அதிகாலையில் விநியோக வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் ஏற்றும் வரை பால் பண்ணைக்குள்ளேயே அவர்கள் இருப்பதை அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தாலே தெரிய வரும் என்பதையும் கடந்த 22.06.2023அன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை நேரில் சந்தித்த போது "மொடா முழுங்கி மகாதேவன்கள்" குறித்த நான்கு பக்க புகார் மனுவை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்களிடம் பேசிய அமைச்சர் அவர்கள் தனது கவனத்திற்கு அது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் வந்திருப்பதாகவும், மாதவரம் பால் பண்ணை மட்டுமின்றி அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும் விநியோக வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களைத் தவிர மொத்த விநியோகஸ்தர்களின் உரிமையாளர்களோ அல்லது அவர்களின் அலுவலக பணியாளர்களோ பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே செல்ல அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், இனி அவர்கள் யாரும் பால் பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தையும் அளித்தார்.

ஆனால் அமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவாதம் அளித்து இரண்டு வாரங்கள் ஆகியும் பால் பண்ணை அதிகாரிகள் குறிப்பாக மாதவரம் பால் பண்ணை அதிகாரிகள் பால்வளத்துறை அமைச்சரின் உத்தரவை கடைபிடிக்காமல், காற்றில் பறக்க விட்டு விட்டு, தாங்கள் பெற்ற கையூட்டிற்கு நன்றிக் கடனாக சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தரை பால் பண்ணைக்குள் அதுவும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட்டுகள் அடுக்கும் பகுதிகளுக்குள் சென்று ராஜ்யம் நடத்த தொடர்ந்து அனுமதித்து வருவதும், அவரும் ஆவின் பால் பண்ணைக்கே உரிமையாளர் போல மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் பகுதிகளில் சர்வசாதாரணமாக சென்று அங்குள்ள தொழிலாளர்களிடம் அதிகார தோரணையுடன் நடப்பதும், அவரைக் கண்டதும் ஆவின் ஊழியர்கள் பம்முவதும் கடந்த திங்கட்கிழமை (03.07.2023) இரவு அங்கே எடுக்கப்பட்ட காணொளி பதிவு மூலம் தெரிய வருகிறது.

அப்படியானால் ஏற்கனவே அந்த மொத்த விநியோகஸ்தர் கூறியது போல மாதவரம் பால் பண்ணை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, அந்த சக்திமிக்க நபரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதும், ஆவின் அதிகாரிகள் அமைச்சரின் உத்தரவிற்கு கீழ்படியாமல் சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தருக்கு ராஜமரியாதை அளித்து, அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தங்களின் சுயநலத்திற்காக, ஆதாயத்திற்காக ஆவின் அதிகாரிகள் செயல்பட்டு வருவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

எந்த ஒரு பால் நிறுவனங்களாக இருந்தாலும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை தவிர வேறு எவரும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஒருவேளை அனுமதி பெற்று செல்வதாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கான முறையான அனுமதி சீட்டு வழங்கப்படுவதோடு, பார்வையாளர்களின் தலை முடி உதிர்ந்து பாலில் கலப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதாலும், வெளியில் இருந்து பால் பண்ணைக்குள் வருபவர்களின் உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நோய்க் கிருமிகள் பால் மூலம் பரவும் ஆபத்து உண்டு என்பதாலும் பால் பண்ணைக்குள் செல்லும் பார்வையாளர்களுக்கு உடலுக்கும், தலைக்கும் முறையான பாதுகாப்பு கவச உடை அளித்து அவர்கள் அதனை அணிந்து கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுமட்டுமின்றி அங்கே பணியாற்றும் தொழிலாளர்களும் தலைக்கு நெகிழி கவசம் அணிந்து தான் பணி செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஆனால் மாதவரம் பால் பண்ணையில் மேற்சொன்ன பாதுகாப்பு விசயங்கள் எதுவும் கடை பிடிக்கப்படாததோடு, பால்வளத்துறை அமைச்சரின் உத்தரவும் காற்றில் பறக்க விடப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.எனவே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமலும், அமைச்சரின் உத்தரவை மதிக்காமலும், மொத்த விநியோகஸ்தருக்கு சாதகமாக நடந்து கொண்ட மாதவரம் பால் பண்ணை அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்வதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஆவின் நிறுவனத்தை சீர்படுத்த வேண்டுமானால் நாங்கள் ஏற்கனவே வழங்கிய ஊழல் அதிகாரிகள் பட்டியல் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை ஆவினில் இருந்து களையெடுக்காத வரை ஆவினுக்கு வளர்ச்சி இல்லை வீழ்ச்சி மட்டும் தான் நடக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்