தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Mrk Paneerselvam: செங்கரும்பு, கருப்புகவுனி அரசி உள்பட 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணி தொடக்கம்

Minister MRK Paneerselvam: செங்கரும்பு, கருப்புகவுனி அரசி உள்பட 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணி தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 01, 2023 10:51 AM IST

இந்த ஆண்டுக்கான 15 வேளாண் சார்ந்த பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 10 வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகளை தொடகுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி உள்பட 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணி தொடக்கம்
மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி உள்பட 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணி தொடக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

சாகுபடி செலவை குறைத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயர கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது.

அந்த வகையில் நமது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு எடுத்து வரும் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கம்பம் பன்னீர் திராட்சை, ராமநாதபுரம் குண்டு மிளகாய், மதுரை மல்லிகை போன்ற சிறப்பு தன்மை வாய்ந்த விளை பொருள்கள் அந்தந்த பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இந்த விளைபொருள்கள் தனி சுவை, மணம், குணம் கொண்டு பாரம்பரிய மிக்க தரத்துடன் சிறப்பை பெறுகின்றன.

இதுபோன்ற வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதால் அதன் தரம் உலக அளவில் பறைசாற்றப்படும். அத்துடன் சட்ட ரீதியாகவும் தனி அங்கீகாரம் கிடைக்கிறது.

இந்த விளை பொருள்களின் உற்பத்தி குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே சார்ந்து இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த பயிர் ரகங்களை அதிக அளவில் சாகுபடி செய்ய முன் வருவார்கள். இதனால் விற்பனை வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இத்தகைய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே தன்னம்பிக்கை உருவாகி அந்த பகுதிகளின் பொருளாதாரமும் உயர்கிறது.

வேளாண் பொருள்கள் மட்டுமின்றி, 55 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

விருப்பாச்சி மலை வாழை, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள் போன்ற 17 வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு இருப்பது விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

வேளாண் விளைபொருள்கலுக்கு புவிசார் குறியீடு முக்கியத்துவத்தை உணர்த்த தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டில் பண்ருட்ட பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் மற்றும் சாத்தூர் சம்பா வத்தல், மதுரை சோழவந்தான் வெற்றிலை, பெம்பலூர் செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, புளியங்குடி எலுமிச்சை, சேலம் கண்ணாடி கத்தரி, ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, கவுந்தப்பாடி அச்சு வெல்லம் போன்ற 10 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நிதியாக ரூ. 30 லட்சம் ஒதுக்கியிருந்தது.

இந்த பொருள்கள் குறித்து வரலாற்று சிறப்பு மிக்க விபரங்கள், அறிவியல் சார்ந்த தகவல்கள், சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து, பல்வேறு நூல்களில் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்அள அறிவுசார் சொத்துரிமை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், இதர பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டான 2023-24இல் 15 வேளாண் பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கி, அரசாணை வழங்கி அதற்கான பணியை தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, பேராவூரணி தென்னை, திருப்பூர் மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டி முனை கத்திர, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரசி, ஜவ்வாது மலை சாமை, கரூர் சேங்கல் துவரை, திண்டிவனம் பனிப்பயறு, விருதுநகர் அதலக்காய், கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்தரி என 15 பொருள்களுக்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான அரசாணை வழங்கி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கு உள்நாட்டில் மட்டுமில்லாமல், உலக அளவில் சட்ட் ரீதியாக அங்கீகாரம் கிடைத்தது.

ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரித்து விவசாயிகள் வருமானம் கணிசமாக உயரும் என நம்பப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்