தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ungalil Oruvan: ‘என் மீது அதிகபட்ச கோபம்’ -முதல்வர் ஸ்டாலினின் 13 பதில்கள்!

Ungalil Oruvan: ‘என் மீது அதிகபட்ச கோபம்’ -முதல்வர் ஸ்டாலினின் 13 பதில்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 14, 2023 12:56 PM IST

TN CM MK Stalin Answers: ‘கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் என எல்லா தேர்தலிலலும் தோற்கட்டிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை சின்னம் என்பதை மறந்துவிடக்கூடாது’ முதல்வர் ஸ்டாலின்

‘உங்களின் ஒருவன்’ முதல்வர் ஸ்டாலின் பதில்கள்
‘உங்களின் ஒருவன்’ முதல்வர் ஸ்டாலின் பதில்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் , சம்பவம் இருக்கா?

முதல்வர் ஸ்டாலின்: சிறைக்கைதிகள் புத்தகம் படிக்க வசதியாக சிறைகளில் நூலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் ஆர்வமுடன் புத்தகங்கள் வழங்கி வருகிறார்கள். ராமநாதபுரத்தை சேர்ந்த பெரியவர் 92 வயதான பாலகிருஷ்ணன் அவர்கள், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கியிருக்கிறார். இதை கேட்டு நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்றனும். மிசாவில் அரசியல் கைதியாக இருந்த போது, நிறைய புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்கள் படித்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகம் தான். 

கேள்வி: கள ஆய்வில் முதல்வர் என்கிற திட்டத்தை வேலூரில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். அந்த ஆய்வின் தாக்கமும், அனுபவமும் எப்படி இருந்தது?

முதல்வர் ஸ்டாலின்: வேலூர் புறநகர் பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை ஆய்வு செய்தேன். உணவின் தரத்தை ஆய்வு செய்தேன். உணவு சுவையாக இருப்பதாக மாணவர்கள் சொன்னார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாரிகளுடன் இரண்டு நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்து, அன்று முதல் சரிசெய்யப்பட்டது. யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் நான் இந்த ஆய்வை மேற்கொள்ளவில்லை. எல்லாம் சிறப்பாக நடைபெறுவதை நேரில் பார்த்து மனநிறைவு அடையவே இந்த ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். வரும் 15, 16 தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி திட்டங்களை ஆய்வு செய்ய போகிறேன். 

கேள்வி: புதுமைப் பெண் கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வெச்சிருக்கீங்க, மாணவிகள் அத்திட்டத்தை உணரத் தொடங்கியிருக்கிறார்களா?

முதல்வர் ஸ்டாலின்: நிச்சயமாக கருதுகிறேன். 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி படிக்க வந்தால், அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் கொடுக்கும் மகத்தான திட்டம் இது. முதலில் 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்றார்கள். இரண்டாம் கட்ட திட்டம் மூலம் 1 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். 12 ம் வகுப்போடு படிப்பை நிறுத்த முடிவு செய்தாராம், திருத்தனியை சேர்ந்த மகாலட்சுமி. அரசாங்கம் ஆயிரம் ரூபாய் தருவதை பெற்றோரிடம் கூறி, இப்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மாணவி பேட்டி கொடுத்திருக்கிறார். ஓராண்டாக கல்லூரி செல்லாத மற்றொரு மாணவி, இத்திட்டம் பற்றி அறிந்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். பல மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது. 

கேள்வி: பொய் வாக்குறுதி கொடுத்து தான், திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக ஈரோடு பிரச்சாரத்ததில் இபிஎஸ் கூறியிருக்கிறாரே?

முதல்வர் ஸ்டாலின்: தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படி தான் பேசுவார். அளித்த வாக்குறுதியில் 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். முன்பு சொன்ன புதுமை பெண் திட்டம், வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு வாக்குறுதி பாக்கி இருக்கு, அடுத்த ஓராண்டில் அனைத்தையும் நிறைவேற்றுவோம். 

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் கருத்து என்ன?

முதல்வர் ஸ்டாலின்: யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எப்படி பேசுவது என்பதை நான் தெரிந்துக் கொண்டேன்.பாஜக மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அது எதுக்குமே பிரதமர் பதில் சொல்லவில்லை. நாட்டு மக்கள் எனக்கு கவசமாக இருக்கிறார்கள் என மக்கள் சொல்லவில்லை; அவராக சொல்லிக் கொள்கிறார். சேறு வீசுங்கள் தாமரை மலரும் என்கிறார். நீர் உள்ள இடத்தில் மலரும் பூ தான் தாமரை. அதற்காக தண்ணீர் உள்ள எல்லா இடத்திலும் மலராது. சேறு இருக்கும் இடமெல்லாம் மலர்ந்திராது. இப்படி வார்த்தை ஜாலங்கள் தான் அவர் பேச்சில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் பற்றியோ அவர் வாய்திறக்கவில்லை. அவர் அளித்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை பிரதமர் கூறவில்லை. திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. தமிழ்நாட்டிற்கு சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை.

கேள்வி: திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என்று பிரதமர் கேட்கிறாரே?

முதல்வர் ஸ்டாலின்: பாஜக ஆட்சியை கவிழ்த்த அதிமுக உடன் கூட்டணி வைத்திருப்பவர் இதை கேட்கலாமா? 

கேள்வி: ஆன்லைன் ரம்மியால் உயிர் பலி தொடர்கிறது, ஆனாலும் அதற்கான தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பிடிவாதம் தொடர்கிறதே?

முதல்வர் ஸ்டாலின்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி தற்கொலை செய்பவர்கள் செய்தி தினமும் வருகிறது. பல சம்பவங்கள் அதனால் தொடர்ந்து நடந்து வருகிறது. இதெல்லாம் ஆளுநருக்கு தெரியாதா? இன்னும் எத்தனை உயிர் போனால், அவர் கையெழுத்திடுவார்? ஆளுநரின் மவுனம் மர்மமாக இருக்கு. 

கேள்வி: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதா?

முதல்வர் ஸ்டாலின்: ஆமாம், தமிழ்நாட்டிற்கு அறிவித்த ஒரே திட்டம் எய்ம்ஸ் மட்டும் தான். அதற்கு ஜப்பான் நிதியை கேட்டார்கள். அந்த நிதியும் வரவில்லை, இவங்களும் நிதி ஒதுக்கவில்லை.

கேள்வி: அதானி குழுமத்திற்கு எதிரா வந்துள்ள அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கோ, நாடாளுமன்ற விசாரணைக்கோ ஒன்றிய அரசு தயாரா இல்லாமல் இருக்குறதை பத்தி உங்க கருத்து என்ன?

முதல்வர் ஸ்டாலின்: அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள், பாஜக அரசு மீதான நேரடி குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் சரியானவை, அதற்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை. 

கேள்வி: ராகுல் காந்தி, கார்கே பேச்சுக்களை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கி இருக்காங்களே?

முதல்வர் ஸ்டாலின்: இது ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல். அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்கள் மனதில் இருந்து நீக்கி விட முடியாது. 

கேள்வி: அமலாக்கத்துறை தான் எதிர் கட்சிகளை இணைச்சிருக்கு என்று பிரதமர் பேசியிருப்பது ஆரோக்கியமான அரசியலா?

முதல்வர் ஸ்டாலின்:  அமலாக்கத்துறை எதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பிரதமரின் ஒப்புதல் வாக்கு மூலம் இது. எதிர்கட்சியை பழிவாங்குகிறோம் என்பதை முதன்முறையாக ஒரு பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. 

கேள்வி: இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைத்திருப்பதால் அக்கட்சிக்கு ஈரோடு கிழக்கில் சாதகம் என்பதை பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் என எல்லா தேர்தலிலலும் தோற்கட்டிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை சின்னம் என்பதை மறந்துவிடக்கூடாது.

கேள்வி: ஆட்சிக்கு வந்து 22 மாதத்தில் ஏட்டிக்குப் போட்டி அரசியலில் விலகி ஆக்கப்பூர்வ அரசியல் செய்யும் நீங்கள், அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?

முதல்வர் ஸ்டாலின்: செயல், அதுதான் சிறந்த சொல் என நினைப்பவன் நான். ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதுவாக இருந்தால் அதை நடைமுறைப்படுத்துபவன் நான். அவதூறுகள், பொய்கள், விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் என்னுடைய ஆட்சி காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. தன் இருப்பை காட்ட வீண் அவதூறுகளை யார் சொன்னாலும், அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். அதை படிக்கிறேன், இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என நினைக்கிறேன். ஆக்கப்பூர்வமா என்ன செய்யலாம் என்கிற சிந்தனைக்குள் போகிறேன். என்னுடைய இந்த பாணி , எதிர்கட்சிகளை நிலைகுலைய வைத்துள்ளது. அவர்களுக்கு அரசியல் செய்ய நான் வாய்ப்பளிக்கவில்லை என்பது தான் அவர்களின் அதிகபட்ச கோபம் என நினைக்கிறேன். ஆக்கப்பூர்வ அரசியல் என் பாணி, அவதூறு அரசியல் அவர்கள் பாணி,’’

என்று அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்