தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Da Hike: ’நெருங்கும் தேர்தல்! அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!’ அகவிலைப்படி 50% ஆக உயர்த்துவதாக முதல்வர் அறிவிப்பு!

DA hike: ’நெருங்கும் தேர்தல்! அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!’ அகவிலைப்படி 50% ஆக உயர்த்துவதாக முதல்வர் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Mar 12, 2024 05:28 PM IST

”DA hike: இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்”

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள்  நலன்  கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும்  பல முன்னோடித்திட்டங்களை  நாடே  வியந்து  பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில்  அரசு  அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின்  பங்கை இந்த அரசு நன்கு  உணர்ந்துள்ளது.  கடந்த காலங்களில்  உருவாக்கப்பட்ட கடும் நிதி  நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு  அலுவலர்கள் மற்றும்  ஆசிரியர்களின்  பல்வேறு  கோரிக்கைகளை  நிதி  நிலைமைக்கு  ஏற்ப  படிப்படியாக நிறைவேற்றுவதில்  இந்த  அரசு  முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்  கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல்  46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். 

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த வாரமே மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.  

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை ஜனவரி 1, 2024 முதல் நான்கு சதவீதம் உயர்த்துவதற்கான ஒப்புதலை கடந்த மார்ச் 7 ஆம் தேதி அன்று மத்திய் அமைச்சரவை அளித்தது. 

இந்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருந்தது. 

அமைச்சரவை முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அரசாங்கத்தின் முடிவால் 49.18 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த முடிவால் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ .12,868.72 கோடி செலவாகும் என்று அவர் கூறி இருந்தார்.

ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணை, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈடுசெய்ய அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரிப்பைக் குறிப்பதாக உள்ளது. ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்திற்கு ஏற்ப இந்த உயர்வு உள்ளது என மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point