தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Seeman Stetement About James Vasanthan Thamizhosai Sangathamizh Isai Thiruvizha

Isai Thiruvizha : தமிழோசை – சங்கத்தமிழ் இசைத் திருவிழா- அழைப்பு விடுத்த சீமான்!

Divya Sekar HT Tamil
Sep 09, 2022 11:22 AM IST

நாம் தமிழர் கட்சி தமிழோசை – சங்கத்தமிழ் இசைத் திருவிழாவை நடத்துவதாக அறிவித்துள்ளது.

சீமான்
சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் தமிழோசை – சங்கத்தமிழ் இசைத் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

தொல்காப்பியர் காலம் தொட்டு இசைக்கென்று ஒரு தனி மரபைக் கொண்டது நம் தமிழினம். அதன் வெளிப்பாடாக, பழம் இசை மரபு தமிழர்களுடையது என்பதை உணர்த்தத் தாங்கள் உருவாக்கிய இசைக்கருவிகளுக்கு “ழ”கரப் பெயர்களைச் சூட்டினர். தோல் கருவிக்கு “முழவு” என்றும், நரம்புக் கருவிக்கு “யாழ்” என்றும், துளைக் கருவிக்குக் “குழல்” என்றும் பெயரிட்டுத் தமிழிசையின் பழமையையும் தனித்துவத்தையும் நிலைநாட்டினர்.

இத்தகைய இசை மரபின் தொடர்ச்சியாக 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப் பிள்ளை என்ற தமிழிசை மூவரால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுக் காத்து வரப்பட்டிருக்கிறது. 

ஆரியத் திரிபு வேலையின் ஓர் அங்கமாக, 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராசர் தமிழிசையைக் களவாடி, தெலுங்கு கீர்த்தனைகளை எழுதி அதற்குக் கர்நாடக இசை என்றும் பெயர் மாற்றித் தனித்துவமான தமிழிசை மரபை மறக்கடிக்கச் செய்தனர். இதன் விளைவாக ஆரிய சமசுகிருத மயமாக்கப்பட்ட கர்நாடக இசையையே தமிழர்களும் அக்காலம் தொட்டு பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையை மாற்ற தமிழிசையை மீட்டுருவாக்கம் செய்ய, சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் பல்வேறு நூற்றாண்டுகளில் பல நூறு தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பெற்ற தமிழ்ப் பாடல்களை இசை வடிவாக்கி, அவற்றை எளிமையாக இன்றைய சமூகத்திற்குக் கடத்தும் பணியை நாம் தமிழர் கட்சி ஐயா ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் “தமிழோசை” மூலம் செய்ய முற்படுகிறது. 

இந்தத் தொடக்க நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, ஊராட்சி என்று அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழிசையை மீட்கும் இத்தகைய தனித்துவமான முன்னெடுப்பில் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை வேண்டுகோள் விடுக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகளுக்குப் பெரும் பொருளாதாரம் தேவைப்படுகிறது. இதற்குத் தங்களால் இயன்ற பொருளுதவியைச் செய்யுமாறு தாய்த்தமிழ் உறவுகளை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்