தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அக்னி பாத் ஆள் சேர்ப்புக்கு நுழைவுத்தேர்வு எப்போது? – விவரங்கள் உள்ளே…

அக்னி பாத் ஆள் சேர்ப்புக்கு நுழைவுத்தேர்வு எப்போது? – விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil
Feb 24, 2023 02:01 PM IST

ராணுவத்தில் அக்னி வீரர்கள் சேர்ப்புக்காக திருச்சி, நெல்லையில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாக மண்டல ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். வழக்கமாக அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களை வரவழைத்து உடல் தகுதியை நிரூபிக்க ஓடவைப்பார்கள். அதன்பிறகே எழுத்து தேர்வு நடைபெறும். ஆனால் தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

இந்த முறை முதலில் ஆன்லைன் முறையில் நுழைவுத்தேர்வும், அதில் தேறியவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும். அதன்படி அடுத்த மாதம் அதாவது 17ம் தேதி முதலில் ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு மின் அஞ்சலில் அனுப்பப்படும். இந்தியா முழுவதும் 176 இடங்களில் இந்த பொதுநுழைவுத்தேர்வு நடைபெறும். 

இதில் திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை திருச்சியில் 2 இடங்களிலும், நெல்லையில் ஒரு இடத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு பொதுநுழைவுத்தேர்வு நடைபெறும். நுழைவுத்தேர்வு கட்டணம் ரூ.500. இதில் ரூ.250 மட்டும் விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். 50 சதவீத செலவை ராணுவ அமைச்சகம் ஏற்கும். ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?  

அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இது கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் ஆகிய மூன்றுக்கு இளமையான வீரர்களை கொடுக்கும் திட்டமாகும். நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள். ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர முடியும். அவர்களின் வயது 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 

இத்திட்டத்தின்படி ,ராணுவத்தில் பணியில் சேரும் வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் கூடுதல் வாய்ப்பை பெறுவார்கள். எஞ்சிய 75 சதவீதம் பேர் பணியில் இருந்து வெளியேற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தற்போது உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட, மூன்று மடங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்