தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Old Lady Arguement With Conductor In Coimbatore On Free Bus Scheme

Free bus scheme:காசை பிடி, எனக்கு ஓசி டிக்கெட் வேணாம்...கோவையில் அலறவிட்ட பாட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 29, 2022 03:22 PM IST

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, பெண்கள் ஓசியில் பயணிப்பதாக மூத்த அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிஸ் அதற்கு எதிர்வினையாக கோவையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்க மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

கோவையில் அரசு பேருந்தில் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி
கோவையில் அரசு பேருந்தில் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது காசை வாங்க மறுத்த நடத்துநர், உங்களுக்கு இலவசம் என்றார். ஆனால் ஓசியில் வரமாட்டேன் என்றும், காசு வாங்கிக்கொண்டு டிக்கெட் தருமாறு அடம்பிடித்துள்ளார். காசு வாங்காவிட்டால் தனக்கு டிக்கெட்டும் வேண்டாம் என்று அவர் நடந்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் பெண்கள் எல்லோரும் காசு கொடுக்காமல்தான் பயணிக்கிறார்கள் என்றனர். இதற்கு தமிழ்நாடே காசு கொடுக்காமல் போனாலும், நான் வரமாட்டேன் என்றார்.

இதையடுத்து நடந்துநர் அந்த மூதாட்டியை சமாதானப்படுத்த முயற்சித்தபோது, இலவசம் என்று சொல்லிவிட்டு ஓசியில் வருவதாக ஏன் சொல்கிறார்கள் என்று பாட்டி முறையிட்டதோடு, காசுக்கு டிக்கெட் தருமாறு விடாப்பிடியாக இருந்தார்.

பின்னர் நடந்துநரும் வேறு வழியில்லாமல் மூதாட்டியிடம் பெற்ற காசுக்கு டிக்கெட்டை கொடுத்து மீத பணத்தையும் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த மொத்த சம்பவத்தையும் பயணி ஒருவர் விடியோவாக எடுத்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு திமுக அரசு பொறுபேற்றவுடன் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மகளிர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. தற்போது வரை இந்த திட்டமானது நடைமுறையில் இருந்து வருகிறது.

அதேவேளையில் இந்த திட்டம் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகளும் வருவதோடு, அதுதொடர்பாக விமர்சனங்களும் முன் வைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

குறிப்பாக பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நடந்துநர்கள் மோசமான நடத்தையை வெளிப்படுத்துவது, பேருந்தை நிறுத்தாமல் செல்வது போன்ற புகார்கள் வந்த நிலையில் அதுதொடர்பான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரிடியாக தலையிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரையை வழங்கினார்.

இருப்பினும் இந்த திட்டம் தொடர்பாக சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை. கடந்த சில நாள்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கு திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்ததாக கூறிய அவர், இதனால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று மிகவும் ஏளனமாக பேசினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு தொடர்பான விடியோக்கள் வைரலான நிலையில், பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதன் எதிரொலியாக கோவையில் அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து டிக்கெட் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

சுயமரியாதை பற்றி பேசும் திமுகவினரிடமிருந்து பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் சுயமரியாதையை கேலி செய்யும் விதமாக அமைந்திருந்த பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக இந்த மூதாட்டியில் செயல் அமைந்திருப்பதாக பலரும் தங்களது கருத்துகளை மேற்கூறப்பட்டிருக்கும் நிகழ்வின் விடியோவை பகிர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இலவச பேருந்து விவகாரத்தில் இதுவரை அரசு பேருந்தின் நடந்துநர்களும், ஓட்டுநர்களும் மட்டுமே சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், தற்போது மூத்த அமைச்சர் ஒருவரின் பேச்சுக்கு எதிர்வினை வந்திருப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன நடவடிக்கை மேற்கொள்ளபோகிறார் என்கிற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

IPL_Entry_Point