TTV Dhinakaran: ’தேனி தொகுதியில் பணம் தராததுதான் என் பலவீனம்!’ தேர்தல் தோல்வி குறித்து டிடிவி தினகரன் ஓபன் டாக்!
TTV Dhinakaran: ’பழனிசாமிக்கு சிறுபான்மையினர் வாக்களித்ததாக தெரியவில்லையே. பாஜக கூட்டணி இல்லாத நிலையில், ஜெயக்குமார் அவர்களின் பையன் டெபாசிட் இழந்து உள்ளார். தென் தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்து உள்ளது’ என டிடிவி தினகரன் கருத்து
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளது, தமிழக அரசு அவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கேட்க வேண்டும். விடாப்பிடியாக உள்ள சித்தராமையா, சிவக்குமாரிடம் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என கூறினார்.
கேள்வி:- அனைவரையும் ஒருங்கிணைக்க உள்ளதாக புகழேந்தி கூறி உள்ளாரே?
அவர் அதிமுகவை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக 7 ஆண்டுகளாக பழனிசாமியை எதிர்த்து போராடி வருகிறோம். எந்த முடிவையும் தனிமனிதனாக நான் எடுக்க முடியாது. அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும், ஆனால் ஒரு சில சுயநலவாதிகள் தங்களை முன்னிருத்த வேண்டும் என்பதால் கட்சியை அழித்து வருகின்றனர். இரட்டை இலை சின்னம் உள்ளது. அம்மாவின் கட்சி பழனிசாமியிடம் உள்ளது என்று தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டில் அதிமுக 20 தொகுதிகளில் எடுத்த வாக்குகளில் வாக்குகள் குறைந்து இருந்தன. அதிமுகவின் வாக்கு வங்கி 13 சதவீதத்திற்கு மேல் இருந்தது இல்லை. பாஜக கூட்டணி 18.5 சதவீத வாக்குகளை எடுத்து இருக்கின்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடி வருகின்றோம்.
நான் போட்டியிட தேனி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில், ஆயிரம் ரூபாய் தருவதை நிறுத்தி விடுவோம் என மக்களை திமுகவினர் மிரட்டினர். பழனிசாமி 2021ஆம் ஆண்டில் தோற்றது போல், அதைவிட மோசமான தோல்வியை திமுக உறுதியாக சந்திக்கும்.
கேள்வி:- அதிமுக - அமமுக இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதா?
அமமுகவின் பலமாக எங்கள் ஒற்றுமையை கருதுகிறோம். ஓட்டுக்கு ஒரு பைசா செலவு செய்யாமல் மூன்று லட்சம் வாக்குகளை வாங்கி உள்ளோம். அதிமுகவின் கோட்டையாக இருந்த பகுதிகளில் இரட்டை இலை சின்னம் டெபாசிட் போய் உள்ளது. எங்களது பலவீனம் ஓட்டுக்கு பணம் கொடுக்காதது.
கேள்வி:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுமா?
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஒற்றுமையாக முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்துவோம்.
கேள்வி:- எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் வெற்றிடம் உள்ளதா?
ஒரு எம்ஜிஆர், ஒரு அம்மாதான் இருக்க முடியும். அவர்கள் இருந்த சீட்டில் உட்காருவதாலேயே அவர்களாக ஆகிவிட முடியாது. தற்போது அதிமுகவில் திணிக்கப்பட்ட தலைவர்கள்தான் உள்ளனர். அதனால்தான் ஆர்.கே.நகர் தொடங்கி 10 தேர்தல்களில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.
33 சதவீதம் வாக்குகள் வாங்கிய இடங்களில் வெறும் 20 சதவீதம் வாக்குகளைத்தான் அதிமுக பெற்று உள்ளது. அதிமுகவில் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. என்ன காரணத்திற்காக தனி இயக்கம் தொடங்கினோமோ அதில் மாற்றம் ஏதுமில்லாத நிலையில் அதில் இணைய முடியாது.
2019ஆம் ஆண்டில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது கிடையாது. 2021 சட்டமன்ற பொதுதேர்தலிலேயே நான் அதில் இடம் பெறுவதாக இருந்தது. முன்னர் தமிழ்நாட்டில் இருந்த பாஜக எதிர்ப்பு, இப்போது இல்லை. பாஜக வளர்கிறது என்பதை மற்றவர்கள் விரும்பவில்லை என்றாலும், அதுதான் உண்மை. பழனிசாமிக்கு சிறுபான்மையினர் வாக்களித்ததாக தெரியவில்லையே. பாஜக கூட்டணி இல்லாத நிலையில், ஜெயக்குமார் அவர்களின் பையன் டெபாசிட் இழந்து உள்ளார். தென் தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்து உள்ளது.