Ambedkar poster: நீதிமன்றம் வந்த அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம்
டாக்டர் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தரப்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து, விபூதி குங்குமம் வைத்து இருப்பது போன்ற கும்பகோணம் நகரில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டன.
சர்ச்சைக்குரிய இந்த போஸ்டருக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினபாக்கம் போலீசாருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வந்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
இந்த மனு மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் வந்தபோது, "தனிப்பட்ட நபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம்" என அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், “அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, விபூதி அல்லது குங்குமம் வைக்கவோ மாட்டோம் எனவும், அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய பிறகு பேட்டி அளிக்க மாட்டேன்” எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ஏற்று அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் போலீசாருக்கு நீதிபதிக்கு உத்தரவிட்டார்
முன்னதாக, அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக நீதிமன்றத்துக்கு வந்த அர்ஜூன் சம்பத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை இருந்த பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பியபடியே, அர்ஜூன் சம்பத் வெளியேறும்படி பின்தொடர்ந்து வந்தனர். வழக்கில் ஆஜராக அனுமதி சீட்டு பெற்று வந்திருக்கும் தன்னை ஏன் வெளியேற்றுகிறார்கள் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார்
அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டடம் வரை இந்து மக்கள் கட்சிக்கு எதிராகவும், அந்த சம்பத்துக்கு எதிராகவும் சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.