தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Modi 3.0: ’மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறார் எல்.முருகன்!’ பிரதமரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்!

Modi 3.0: ’மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறார் எல்.முருகன்!’ பிரதமரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்!

Kathiravan V HT Tamil
Jun 09, 2024 02:34 PM IST

Modi 3.0: ”பிரதமர் மோடி நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் அழைக்கப்பட்டு உள்ளதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது”

’மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறார் எல்.முருகன்!’ பிரதமரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்!
’மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறார் எல்.முருகன்!’ பிரதமரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்!

ட்ரெண்டிங் செய்திகள்

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அவரது இல்லத்தில் தேனீர் விருந்து அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் அழைக்கப்பட்டு உள்ளதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் 240585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் ஆ.ராசா 473212 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் எல்.முருகன் 232627 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 220230 வாக்குகளையும் பெற்று இருந்தனர். 

பிப்ரவரியிலேயே ராஜ்ஜியசபா எம்.பியான எல்.முருகன் 

கடந்த மோடி அமைச்சரவையில் ஏற்கெனவே மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற 57 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ஜியசபா எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது தொடர்பாக அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் மோடியால் தமிழ் மண்ணுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பிரதிநிதிகள் தர வேண்டும் என்பதற்காக தமிழரான என்னை ராஜ்ஜியசபா உறுப்பினரகவும், அமைச்சராகவும் மோடி அவர்கள் ஆக்கினார் என கூறி இருந்தார். 

முழு அமைச்சரவையின் பலம் 81 வரை இருக்க வாய்ப்பு

30 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்றும், முழு அமைச்சரவையின் பலம் 78 முதல் 81 வரை இருக்கலாம் என்றும் என்.டி.டிவி தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆன அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு முக்கிய இலாக்காகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பாஜக தலைவர்கள் மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார், ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் புதிய முகங்களாக பங்கெடுக்க உள்ளனர்.

சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், பாஜகவின் குஜராத் பிரிவின் தலைவர் சி.ஆர்.பாட்டீல், ஜோதிராதித்ய சிந்தியா, ராவ் இந்தர்ஜித் சிங், நித்யானந்த் ராய், பகீரத் சவுத்ரி மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் அமைச்சர்களாக சேர்க்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிக்கின்றன.

டெல்லியில் முகாம் இட்டுள்ள தமிழிசை, அண்ணாமலை

தமிழ்நாட்டில் மொத்த உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.

இருவரில் ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பிரதமர் மோடி நடத்திய தேனீர் விருந்து நிகழ்ச்சியில் அவர்கள் யாரும் கலந்து கொள்ளாததன் மூலம் இன்று பதவியேற்கும் முதற்கட்ட அமைச்சரவையில் அவர்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

டி20 உலகக் கோப்பை 2024