‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!

‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Oct 12, 2024 07:40 PM IST

‘சாம்சங் தொழிலாளர் பிரச்சனை நாளை அல்லது நாளை மறுநாள் சுமுகமாக முடியும். தமிழக அரசு தலையிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். எனவே சுமுகமான முறையில் முடிவடையும்’

‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!
‘சாம்சங் பிரச்னை நாளை தீரும்.. திமுக கூட்டணி உடையும் என அதிமுக பகல் கனவு’ இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் பேட்டி!

இந்த நிகழ்வில் தேவராட்டம், அம்மன், காந்தாரா, கருப்பசாமி போன்ற வேடங்கள் அணிந்து மூடநம்பிக்கைகளை களைய வேண்டி நாடகங்கள் நடத்தப்பட்டன. நிகழ்வின் இடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

மக்களை திசை திருப்பும் முயற்சி

"தமிழ்நாட்டில் மூட பழக்கவழக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாமியார்களிடம் வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகளை யோகா என்ற பெயரில், பயிற்சி என்ற பெயரில் மிக மோசமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மனிதக் கொழுப்பு, மீன் கொழுப்பு என பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புகிறார்கள்.

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு என கூறி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். மக்களுக்கு தேவையான பல பிரச்சனைகள் உள்ளது. அதனை திசை திருப்புவதற்காக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. ரூ.7000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.33,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி கொடுக்கவில்லை

கல்வித்துறைக்கு ரூ.5263 கோடி நிதியை கொடுக்கவில்லை. ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்று மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார். மெட்ரோ, கல்வி நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மெட்ரோ திட்டத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை. பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. மீனவர்கள் பிரச்சினை தீராமல் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் மட்டுமல்லாமல் இலங்கை கொள்ளையர்களாலும் மீனவர்கள் துன்பப்படுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் வலைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனை மறைப்பதற்காக பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி தப்பிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் இந்த முயற்சியை செய்து வருகிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தனி துறையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சாம்சங் பிரச்னை: இருநாட்களில் சுமூகம்

சாம்சங் தொழிலாளர் பிரச்சனை நாளை அல்லது நாளை மறுநாள் சுமுகமாக முடியும். தமிழக அரசு தலையிட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாங்களும் தலையிட்டு இருக்கிறோம். எனவே சுமுகமான முறையில் முடிவடையும்.

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கனவு காண்கிறார். அது அவரின் உரிமை. அதில், நான் தலையிட முடியாது. கனவுகள் யார் வேண்டுமானாலும் காணலாம். திண்டுக்கல் சீனிவாசன் பகலிலோ, இரவிலோ கனவு கண்டாரா என தெரியவில்லை. அதை நான் கலைக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.