எது தேவையோ அது நடந்தது..கலக்கிய இந்திய மகளிர் படை! விர்ரென எகிறிய ரன்ரேட் - படுதோல்வியுடன் இலங்கை வெளியேற்றம்
பேட்டிங், பவுலிங் என கலக்கிய இந்திய மகளிர் படைக்கு எது தேவையோ அது நடந்தது. இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி விர்ரென எகிறிய ரன்ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் படுதோல்வியுடன் இலங்கை வெளியேற்றம் அடைந்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. ஏற்கனவே விளையாடிய முதல் இரண்டு லீக் போட்டியில் இந்தியா மகளிர் ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டியில் மிக பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய மகளிர் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி மந்தனா 50, ஷெபாலி வர்மா 43 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை சேஸிங்
இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவரில் 90 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் பவுலர்களில் பவுலிங் செய்த அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.