DMK vs AIADMK: ‘யார் ஸ்டிக்கர் பாய்ஸ்? தமிழக மக்களுக்கு தெரியும்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!-in an interview in nagapattinam dmk law minister r raghupathi called aiadmk sticker boys - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Aiadmk: ‘யார் ஸ்டிக்கர் பாய்ஸ்? தமிழக மக்களுக்கு தெரியும்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

DMK vs AIADMK: ‘யார் ஸ்டிக்கர் பாய்ஸ்? தமிழக மக்களுக்கு தெரியும்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 16, 2024 10:37 PM IST

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் 3 ஆம் இடம் பிடித்தார்கள். கன்னியாகுமரியில் 4 ஆம் இடம். விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக 5000 வாக்குகள் கூட வாங்கவில்லை. இவர்களா ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? பாஜக எதைச் சொன்னாலும் அதைச் செய்கிற அடிமைக் கட்சி அதிமுக’’

DMK vs AIADMK: ‘யார் ஸ்டிக்கர் பாய்ஸ்? தமிழக மக்களுக்கு தெரியும்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!
DMK vs AIADMK: ‘யார் ஸ்டிக்கர் பாய்ஸ்? தமிழக மக்களுக்கு தெரியும்’ சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

ஸ்டிக்கர் ஓட்டும் பணியை திமுக செய்கிறது என அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் பாய்ஸ் என பெயர் பெற்றவர்கள் யார்? என நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுகவினரை தான் ஸ்டிக்கர் பாய்ஸ் என சொல்வார்கள். 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது. ஸ்டிக்கர் பாய்ஸ் என்றால் அதிமுக தான் மக்களுக்கு நினைவுக்கு வரும்.

அம்மா சிமெண்ட் எப்போது எடுத்தார்கள் என்பது அண்ணா திமுகவினருக்கே தெரியாது. தரமான நல்ல சிமெண்ட் தரவேண்டும் என்பதற்காக வலிமை சிமெண்ட் என்ற பெயரில் தரப்படுகிறது. அம்மா சிமெண்டை எடப்பாடி பழனிச்சாமி காலத்திலேயே கைவிட்டு விட்டார்கள்.

அதிமுகவிற்கு நியாபகம் இருக்கிறதா?

வலிமை சிமெண்டை ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிமெண்ட் கிடைப்பதற்காக அரசின் சார்பாக தருகிறோம். அதுவும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. எங்களுக்கு ஸ்டிக்கர் மாற்றி ஓட்டும் பழக்கமும், ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கமும் இல்லை. முதலமைச்சர் கொண்டுவந்த எந்த திட்டமாக இருந்தாலும் அது திமுகவின் லேபிள் ஓட்டப்பட்ட திட்டங்களே தவிர, மற்றவர்களை பார்த்து

காப்பி அடித்த எந்த திட்டங்களும் கிடையாது. யாரையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சொந்த லேபிளிலேயே நிற்க முடியும். அதற்கான சக்தி எங்களுக்கு உள்ளது. அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் என்பது வேறு. அம்மா மருந்தகத்தை அதிமுகவினரே ஞாபகம் வைத்திருக்கிறார்களா? என தெரியவில்லை.

பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும், D.Pharm மற்றும் B.Pharm படிப்பு முடித்தவர்களுக்கு சொந்த தொழில் தொடங்கிட வாய்ப்பு அளிக்கும் அற்புதமான திட்டமாகும்.

அதிமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் எப்படி இருந்தன?

மருந்தகங்களுக்குத் தேவையான தரமான மருந்துகள், TNMSC மூலம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படும். குறிப்பாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகள் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு மருந்தங்களுக்கு அம்மா மருந்தகம் எனப் பெயரிடப்பட்டது. இம்மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தகங்களை போன்றே சங்கங்களால் நடத்தப்பட்டன; தொழில் முனைவோர் ஈடுபடுத்தப்படவில்லை. கூட்டுறவு மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம் 380 எண்ணிக்கையில் மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன. அம்மா மருந்தகங்களில் குறிப்பிட்ட வகை மருந்துகள் (Branded medicines) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் நேரில் சென்று திடீரென ஆய்வு நடத்தி அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடித்து போடும் வேலையை ஜெயக்குமார் நிறுத்திக் கொள்வார் என நம்புகிறோம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என வீர வசனம் பேசி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்திற்கும் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள், விக்கிரவாண்டி தேர்தலை கண்டு அஞ்சு ஓடியவர்கள், ஏதோ இன்று தைரியமாக இருக்கிறோம் என்பது போல பேசி உள்ளார். அங்குள்ளவர்கள் கிளம்பி விடக்கூடாது என்பதற்காக ஜெயக்குமாரை கொண்டு எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை தந்திருக்கிறார்.

அதிமுக கூடாரம் காலி ஆகி வருகிறது என்பதுதான் உண்மை. அங்கிருந்து செல்பவர்களை தடுப்பதற்காகத் தான், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் எனக் கூறியுள்ளார். தேர்தல் வந்தால் சந்தியுங்கள் உங்கள் நிலைமை என்ன? என்பது நாடறிந்த உண்மை. எப்பொழுது தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயார் என்று அதிமுக சொல்லும். ஆனால் தேர்தல் நடக்கும் போதெல்லாம் தலை தெறிக்க ஓடிவிடுகிறது. விக்கிரவாண்டி தேர்தலில் ஏதேதோ காரணம் சொல்லி போட்டியிலிருந்து விலகி ஓடினார்கள்.

மோடி அரசின் செல்லப் பிள்ளை

நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் 3 ஆம் இடம் பிடித்தார்கள். கன்னியாகுமரியில் 4 ஆம் இடம். விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக 5000 வாக்குகள் கூட வாங்கவில்லை. இவர்களா ஆட்சியை பிடிக்க போகிறார்கள்? பாஜக எதைச் சொன்னாலும் அதைச் செய்கிற அடிமைக் கட்சி அதிமுக என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மத்திய அரசைக் கண்டிப்பதாக தீர்மானம் இயற்றினாலும் பாஜகவின் என்ற பெயரைக் குறிப்பிட தைரியமில்லாத கட்சி அதிமுக. அதிமுகவின் உட்பூசல் இன்னும் ஓயவில்லை. அதனால் அவசர செயற்குழுக் கூட்டம், ஆலோசனை எல்லாம் நடக்கின்றது. இதை மறைப்பதற்காகப் பொத்தாம் பொதுவாகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவின் – மோடி அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகத்தான் எடப்பாடியும் அதிமுகவினரும் நடந்துகொண்டு வருகின்றனர்.

உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டு நலனைப் பலி கொடுத்த அதிமுகவினரை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் மன்னிக்க மாட்டார்கள். இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த இலக்கை திமுக அடையும்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழ்நாடு நம்பர் 1

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் சட்டம் ஒழுங்கு பற்றிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் சார்பில் மாதம்தோறும் தரவரிசை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 10-07-2024-இன் அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் முதல் இடத்தில் உள்ளது.

அதாவது 95.47 புள்ளிகளைப் பெற்று சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2-வது இடத்தை 93.96 புள்ளிகளைப் பெற்று மிசோரம் பிடித்துள்ளது. 3-ஆவது இடத்தில் தெலங்கானா உள்ளது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் மிசோராம் மக்கள் தொகை 11 இலட்சம் தான். 3-வது இடம் பிடித்த தெலுங்கானாவின் மக்கள் தொகை 4 கோடி தான். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி.

கொடநாடு கொலை - கொள்ளை, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்ததை மறந்துவிட்டு பேசுகிறார் ஜெயக்குமார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை, தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது நாட்டிற்கே தெரிந்த செய்தி. அவர்களை இன்றளவும் கட்சியில் வைத்துக்கொண்டு போதைப்பொருள் புழக்கம் பற்றி ஜெயக்குமார் பேசுவது வெட்கக்கேடு.

திமுக அரசின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கை

திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்து 2022 ஆண்டு ஜூன் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 75 கடைகளுக்கு Emergency Prohibition Order என்ற அடிப்படையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.8.2022 அன்று தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக முதன்முதலில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசால் போதைப் பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் “இரு வார கால” ஆப்பரேஷனாக நடத்தப்பட்டது. மார்ச் 2022-இல் ஆப்பரேஷன் “கஞ்சா வேட்டை 2.0”, டிசம்பர் மாதம் ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டது. இதன்மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 12 ஆயிரத்து 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 ஆயிரத்து 250 நபர்கள் கைது செய்யப்பட்டு,

26 ஆயிரத்து 525 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குட்கா விற்பனை தொடர்பாக 48 ஆயிரத்து 838 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50 ஆயிரத்து 875 நபர்கள் கைது செய்யப்பட்டு, 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் ஆட்சியில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

புதிதாக தொழில்களிலும் தமிழ்நாடு தான் இந்தியாவில் முதலிடம். திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 6384 புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு எப்படி முதலீடுகள் ஈர்ப்பதிலும், புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதிலும் முதன்மைஇடத்திற்கு முன்னேறியது?

எந்த தேர்தல் வந்தாலும் திமுகவிற்கே வெற்றி

இவை அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த சாதனைகள். அதிமுக ஆட்சியில் புதியதாக தொழில் தொடங்கியவர்களின் எண்ணிக்கையை நாம் கண்டதுண்டா? நிச்சயமாக எந்த தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி தான் வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆளுநர் மாளிகையில் நடந்த விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தி வீர வசனம் பேசியுள்ளார். நாங்கள் வர முடியாது என்பதை கட்சியின் சார்பாக சொன்ன பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து முதலமைச்சரை தொடர்பு கொண்டு, நீங்கள் அவசியம் அதிலே கலந்து கொள்ள வேண்டும் என ஆளுநரே தொடர்புகொண்டு கேட்கும் நிலையில் நாட்டின் முதலமைச்சராக இருப்பவர் ஆளுநரை சந்திக்காமல் இருக்க முடியாது.

பாரதிய ஜனதாவிற்கு எந்த காலத்திலும் அடிபணிய வேண்டியதோ பயப்பட வேண்டியதோ அவசியம் இல்லை. நாங்கள் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக பாஜகவை எதிர்க்கும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். எல்லோரையும் ஒருங்கிணைத்து மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் என்பதை நாடு மறக்காது. நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை, அஞ்ச வேண்டியதில்லை. மடியில் கனமில்லை, பயம் இல்லை. மடியில் கணம் அதிமுகவிற்குத்தான். பயம் அவர்களுக்கு தான். அவர்கள் வேண்டுமென்றால் அவர்கள் எஜமானர்களுக்கு பயப்படலாம், எங்களுக்கு எஜமானர்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் அல்ல.

கலைஞர் நாணயம்.. அரசியல் ஆக்குகிறது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்த நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவரது நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிடுவதை அதிமுக அரசியல் ஆக்குகிறது. கட்சியின் தலைவியின் மறைவுக்கு பிறகு அகில இந்திய தலைவர்களை அழைத்து ஒரு இரங்கல் கூட்டமாவது அவர்களால் போட முடிந்ததா? தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவை தாஜா செய்து கிடந்தவர்கள் அதிமுகவினர். எதிர்கட்சியாக இருந்த போதும் கம்பீரமாக திமுக எதிர்த்தது; இப்பொழுதும் அதே கம்பீரத்துடன் பாஜகவை எதிர்க்கிறது.

மேலும் அரசியல் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.