75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!
History of DMK: 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். அவரது மறைவு வரை திமுகவால் ஆட்சி அரியணையில் ஏற முடியவில்லை. இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்ட கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகள் இன்றளவும் பேசப்படுகின்றது.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 75ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில் திமுக தனது பவளவிழாவை கொண்டாடும் நிலையில் அதன் சுருக்கமான வரலாற்றை பேசுகிறது இந்த தொடர்….!
அண்ணாவின் மறைவுக்கு பின்…!
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக தனது அடுத்த பரிணாமத்தை அடைந்தது. அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கலைஞர் கருணாநிதி இடையே போட்டி இருந்தது. எம்ஜிஆர் உள்ளிட்டோரின் ஆதரவு கலைஞர் கருணாநிதிக்கு இருந்தது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ஆதரவு உடன் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அதே ஆண்டில் திமுகவின் தலைவர் ஆக கலைஞர் கருணாநிதியும், பொதுச்செயலாளர் ஆக நாவலர் நெடுஞ்செழியனும் தேர்வு செய்யப்பட்டனர்.
மீண்டும் முதலமைச்சர் ஆன கருணாநிதி
அண்ணா மறைவுக்கு பின்னர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. கலைஞர் கருணாநிதி முதல்முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனார். 1974ஆம் ஆண்டு ’மாநில சுயாட்சியை’ வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி நிறைவேற்றினார். மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தியது, சைக்கிள் ரிக்ஷா ஒழிப்பு, பேருந்துகள் அரசுடமை ஆக்கல், உணவு பொருள் வழங்கல் கழகம், வீட்டு வசதி கழகம் உள்ளிட்ட திட்டங்கள் முக்கியமானதாக மாறியது.
ஆனால் எம்ஜிஆர் - கலைஞர் கருணாநிதி இடையே நிலவி வந்த பிரச்னை கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆயிரம் விளக்கு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திமுக தலைமையை விமர்சனம் செய்தும், அரசுப்பதவில் உள்ள திமுகவினர் தங்களின் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்றும் திமுக பொருளாளர் ஆக இருந்த எம்ஜிஆர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிமுகவின் பிறப்பும் ஆட்சி கலைப்பும்!
இதன் எதிரொலியாக திமுக பொதுக்குழு எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார்.
1975ஆம் ஆண்டில் அவசர நிலை பிரகடனம் இந்தியாவில் அமல் செய்யப்பட்டது. அவசர நிலையை எதிர்த்ததால் 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஏராளமான திமுகவினர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆட்சியை பறிகொடுத்த திமுக
1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். அவரது மறைவு வரை திமுகவால் ஆட்சி அரியணையில் ஏற முடியவில்லை. இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்ட கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகள் இன்றளவும் பேசப்படுகின்றது.
கிட்டியும் கிட்டாத அரியணை
1989ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை கட்டுப்படுத்த தவறியதாக கூறி கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது.
1991ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியால் வெறும் 2 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
வைகோ ஏற்படுத்திய செங்குத்து பிளவு
1993ஆம் ஆண்டு திமுக எம்.பியாக இருந்த வைகோ நீக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி இரண்டாவது பிளவை சந்திக்க நேரிட்டது. கட்சியின் தூண்களாக கருதப்பட்ட 10 மாவட்ட செயலாளர்கள் வைகோ உடன் பிரிந்து சென்று மதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினர்.
மீண்டும் ஆட்சியை பிடித்த திமுக
1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக மீண்டும் வென்றது. தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றம் செய்யப்பட்டது. டைடல் பார்க் உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஐந்தாவது முறையாக முதலமைச்சர் ஆன கலைஞர்
2001ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியை இழத நிலையில் 2006ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகள் உதவி உடன் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. 5ஆவது முறையாக கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டம், இலவ்ச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி திட்டம், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை முக்கியமான திட்டங்களாக இருந்தது.
இருப்பினும் மின்வெட்டு, நில அபகரிப்பு, 2ஜி ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்னைகள் 2011ஆம் ஆண்டில் திமுகவின் தோல்விக்கு காரணம் ஆனது. அடுத்து நடந்த 2016 தேர்தலிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 98 எம்.எல்.ஏக்கள் உடன் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
திமுகவில் ஸ்டாலினின் எழுச்சி
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் ஆக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அடுத்து நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 2026 தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றும் இலக்குடன் பவளவிழாவை நோக்கி நகர்கிறது.