‘போற்றுதற்குரிய பெருந்தமிழர்’.. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்,”பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான வீரதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை இன்று.இந்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் ”என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனார் அவர்களின் 116-ஆவது பிறந்தநாளும், 61-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.
இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சமூகவலைத்தள பக்கத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி என்று கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதள பக்கத்தில், “போற்றுதற்குரிய பெருந்தமிழர்! தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! ”என்று குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று.
சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சரத்குமார்
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் குருபூஜையன்று போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.