Kejriwal: ’பாஜக மீண்டும் வந்தால் யோகி காலி! அமித்ஷாதான் அடுத்த பிரதமர்!’ டெல்லியில் குண்டை தூக்கி போட்ட கெஜ்ரிவால்!
“யோகி ஆதித்யநாத் இன்னும் இரண்டு மாதங்களில் உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை இழக்க நேரிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கைவிடுத்துள்ளார்”
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஓரங்கட்டப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் பிரதமராக வருவார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
இடைக்கால ஜாமீனில் வெளிவந்த ஒரு நாளுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால், அனைத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 2 மாதங்களில் பதவியை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இப்போது நமது அமைச்சர்கள், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி. யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.
பாஜகவில் உள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, எம்.எல்.கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களில் உத்தரபிரதேச முதல்வரை மாற்றிவிடுவார்கள்” என்று கெஜ்ரிவால் கூறினார்.
பாஜகவில் 75 வயதைக் கடந்த பிறகும் எந்தத் தலைவரும் தீவிர அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமராக வருவார்கள் என்று இவர்கள் கேட்கிறார்கள், நான் பாஜகவிடம் கேட்கிறேன், உங்களுக்கு யார் பிரதமர் என்று? பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகிறது. கட்சியில் உள்ள தலைவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று விதியை வகுத்தார்.
எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இப்போது பிரதமர் மோடி செப்டம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறப் போகிறார்" என்று அவர் கூறினார். பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு ஓட்டு கேட்கிறார், மோடியின் உத்தரவாதத்தை அமித் ஷா நிறைவேற்றுவாரா? என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. ஆம் ஆத்மி தலைவர் ஒன்பது சம்மன்களைத் தவிர்த்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியது.
கடந்த மாதம் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு 21 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஜூன் 2ம் தேதி அவர் திகார் சிறைக்கு திரும்ப வேண்டும்.
கோரக்பூரில் இருந்து முன்னாள் எம்.பி.யான யோகி ஆதித்யநாத், 2017ல் உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார். 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அவரது தலைமையில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, காவி உடை அணிந்த அரசியல்வாதி, நாட்டின் மிக முக்கியமான இந்துத்துவா முகமாக உள்ளார்.