PrakashRaj vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Prakashraj Vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

PrakashRaj vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Jun 02, 2024 06:20 PM IST

”எல்லோரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக எல்லா ஆட்சிகளும் தள்ளாடிக்கொண்டு இருக்கும் போது, அப்போதே 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எதிர்ப்பு

PrakashRaj vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!
PrakashRaj vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!

69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து 

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியின் கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “கலைஞர் இருந்து இருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருக்காது. அவர் இருக்கும் வரை யாரும் வாலாட்ட முடியவில்லை. எல்லோரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக எல்லா ஆட்சிகளும் தள்ளாடிக்கொண்டு இருக்கும் போது, அப்போதே 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர். என்னிடம் பேசிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறினார், கலைஞர் இல்லை என்றால் என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆகி இருக்க முடியாது என்று கூறினார். கலைஞர் உடன் நிறைய அனுபவங்கள் எனக்கு இருந்தது. இருவர் படம் நடித்து 28 வருடங்கள் ஆகின்றது. 30 ஆண்டு காலம் முன்பாக தமிழகத்திற்கு வந்த போது, எனது மனதில் இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். நான் இருவர் படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அவரை கதாபாத்திரத்தில் பிரதிபலிக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. இருவர் படத்தில் தண்டவாளத்தில் படுத்திருப்பது போன்ற காட்சி ஒன்று வரும். அதில் நான் படுத்திருக்கும் போது எனக்கு வேர்த்து விட்டது. ஆனால் ஒருவர் உண்மையிலேயே நிஜ வாழ்க்கையில் செய்திருக்கிறாரே என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது.” என கூறி இருந்தார். 

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் கண்டனம் 

இந்த நிலையில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வரலாற்று திரிபுகளை செய்ய வேண்டாம் என்று நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு திரு.கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.

69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு‌ வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்கள் சமூக நிதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார்.

69 சதவீத இடஒதுக்கீட்டின் பின்னணி

பின்னர்‌ சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன்.

இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாண்புமிகு அம்மா தலைமையில் அன்றைய பிரதமர் திரு.நரசிம்ம ராவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது.

1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24,அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது.

இதற்காக தான் திராவிட கழக தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் அம்மா அவர்களுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார்.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமால் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது!

மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு!

இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.