தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: ’டிரக் மாஃபியா ஜாபர் சாதிக் மீது வழக்குகள் இருப்பது தெரியுமா தெரியாதா?’ ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் கேள்வி!

ADMK: ’டிரக் மாஃபியா ஜாபர் சாதிக் மீது வழக்குகள் இருப்பது தெரியுமா தெரியாதா?’ ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் கேள்வி!

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 05:13 PM IST

”டிரக் மாஃபியா ஜாபர் சாதிக் இதுபோன்ற போதைப் பொருள் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடையவர் என்பது முதன்மை குடும்பத்தினருக்குத் தெரியுமா? தெரியாதா?”

ஆர்.எஸ்.பாரதி - டி.ஜெயக்குமார்
ஆர்.எஸ்.பாரதி - டி.ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க 'மக்கள் எழுச்சிப் போரை' கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் துவக்கினார். போதை கலாச்சார சீரழிவிற்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்தும், 'டிரக் மாஃபியாக்களாக' வலம் வரும் திமுக நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல் குடும்பத்துடன் டிரக் (Drug) மாஃபியாக்கள் கொண்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் வலம் வந்ததை சுட்டிக் காட்டியும், 25.2.2024 அன்று நடைபெற்ற சேலம் பொதுக்கூட்டத்திலும், 26.2.2024 அறிக்கை மூலமும், 3.3.2024 அன்று விழிப்புணர்வு வீடியோ மூலமும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கண்டித்தார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு ஒருவார காலம் ஆன நிலையில், எந்தவிதமான தெளிவான விளக்கத்தை, ஆளும் விடியா திமுக அரசின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ தெரிவிக்காத நிலையில், இந்த மக்கள் விரோத அரசுக்கு பாடம் புகட்ட அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைப்படி, 4.3.2024 அன்று தமிழகம் முழுவதும் 'போதை பொருட்கள் கலாச்சார சீரழிவை' எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடலேறுகள் நடத்திக் காட்டினார்கள்.

இந்த ஆர்பாட்டத்திற்கு இளைஞர்களும், மகளிரும் எழுச்சியோடு திரண்டு வந்து ஆர்ப்பரித்ததைக் கண்டு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரைச் சுற்றியுள்ள கூட்டமும் கதிகலங்கிப் போனது. அவர்களுடைய பதைபதைப்புகளில் வெளிவருகிறது.

எப்போதும் நேரடியாக பதில் அளிக்கத் திராணியற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், 4.3.2024 அன்று அரைகுறை பேட்டியை பழைய மோட்டார் சைக்கிள் ஆலந்தூர் பாரதி மூலம் அளிக்க வைத்துள்ளார். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்கிற்கு விலை சொல்வது போல், ஆர்.எஸ். பாரதி பிரச்சினையை திசை திருப்ப முயன்றுள்ளார்.

எங்கள் பொதுச் செயலாளர் பொதுக்கூட்டத்திலும், அறிக்கையிலும் குறிப்பிட்டதுபோல், தமிழக இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழிக்கக் கூடிய போதைப் பொருட்கள் கலாச்சாரத்தைத் தடுக்க விடியா திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

டிரக் மாஃபியா ஜாபர் சாதிக் இதுபோன்ற போதைப் பொருள் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடையவர் என்பது முதன்மை குடும்பத்தினருக்குத் தெரியுமா? தெரியாதா?

இப்படிப்பட்டவருக்கு திமுக-வின் அயலக அணியில் உயர்ந்த பொறுப்பை வழங்கியதன் காரணம் என்ன?

டிரக் மாஃபியா ஜாபர் சாதிக், முதன்மை குடும்ப உறுப்பினர்களுடனும், சில மூத்த அமைச்சர்களுடனும், திமுக மூத்த நிர்வாகிகளுடனும், காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் காட்டிய நெருக்கத்திற்கு உங்கள் பதில் என்ன?

முதல் குடும்பத்தின் நெருக்கத்தைப் பயன்படுத்தி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் வலம் வந்ததும், அதன்மூலம் போதைப் பொருள் நடமாட்டத்தை தமிழகத்தில் எவ்விதமான தடையுமின்றி விரிவுபடுத்தியது தெரியுமா? தெரியாதா?

இந்திய அளவில் மிகப் பெரிய டிரக் மாஃபியாவாக சிக்கிக் கொண்டபின் நீங்கள் சட்ட ரீதியாக தமிழக காவல்துறை மூலம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், பேட்டி என்ற பெயரில் எதேதோ பிதற்றி திசை திருப்பியுள்ளார்.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, டிரக் மாஃபியா ஜாபர் சாதிக்கிற்கு திமுக-வில் முக்கிய பொறுப்பு, முதலமைச்சர் குடும்பம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நெருக்கம் ஆகியவை, உங்கள் தலைவர் பொம்மை முலமைச்சர் ஸ்டாலின் அறிந்தே செய்தாரா? அறியாமல் செய்தாரா? அறிந்தே செய்தார் எனில் அவரும் குற்றவாளி ஆகிறார். அறியாமல் செய்தார் என்பதால், அவர் ஊரே சொல்வது போல் 'மங்குனி முதல்வர்' ஆகிறார்.

வீண் வியாக்கியானம் பேசுவதை, வாய்வீச்சு உளரல் பாரதி நிறுத்திவிட்டு, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் கலாச்சார சீரழிவு பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தினை பொதுவெளியில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுமையாக தடுக்க, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

IPL_Entry_Point