தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Alagiri Supporter Ml Raj Interview On Udhayanidhi Stalin And Alagiri Meeting

HT Tamil Exclusive: ‘நடக்கப் போவதை பாருங்க’ -அழகிரி ஆதரவாளர் சிறப்பு பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 17, 2023 11:17 AM IST

Alagiri Supporter M.L.Raj Interview: ‘தேர்தல் பணிகளில் அழகிரி உடன் ஈடுகொடுக்க முடியாது. மீண்டும் இடைவெளி வராமல் இருப்பது, எல்லாருக்கும் நல்லது. அடுத்து வருவது நல்லதாகவே நடக்கட்டும்’ -எம்.எல்.ராஜ் பேட்டி!

அமைச்சர் உதயநிதிக்கு தனது ஆதரவாளர் எம்.எல்.ராஜூவை அறிமுகப்படுத்திய அழகிரி.
அமைச்சர் உதயநிதிக்கு தனது ஆதரவாளர் எம்.எல்.ராஜூவை அறிமுகப்படுத்திய அழகிரி.

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: அழகிரி-உதயநிதி சந்திப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எம்.எல்.ராஜ்: நானும் அந்த சந்திப்பின் போது உடன் இருந்தேன். இந்த சந்திப்பு பெரிய மகிழ்ச்சியளிக்கிறது. அழகிரி அண்ணனை கட்சியிலிருந்து நீக்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் குடும்ப அளவில் வந்து அவரை சந்திப்பது பெருமை தான். குடும்பம் ஒன்று சேர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: இந்த சந்திப்பிற்குப் பின் கசப்புகளை மறந்து அழகிரியை மீண்டும் குடும்பத்தில் இணைக்க வாய்ப்பு இருக்கிறதா?

எம்.எல்.ராஜ்: இருக்கு… இருக்கு… கண்டிப்பா இருக்கலாம். எட்டு ஒன்பது ஆண்டுக்குப் பிறகு பெரியப்பாவிடம் ஆசி வாங்க வந்திருக்காரு. ரொம்ப சந்தோசமா இருக்காரு!

கேள்வி: இது ஒரு நடைமுறை சந்திப்பு தானா? இல்லை முக்கியத்துவமான சந்திப்பு தானா?

எம்.எல்.ராஜ்: இல்லை… இல்லை… இது முக்கியத்துவமான உணர்வுப்பூர்வமான சந்திப்பு தான். மகிழ்ச்சியோடு தான் உதயநிதி வந்தார். அழகிரி அண்ணன், உதயநிதியை மனதார பாராட்டினார். அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உதயநிதி வருவது ஏற்கனவே திட்டமிட்டது தானா? நீங்கள் எல்லாம் எப்படி சரியான நேரத்தில் அங்கு வந்தீர்கள்?

எம்.எல்.ராஜ்: அவருடைய ஆதரவாளர்களான நான் உட்பட 5 பேருக்கு, மாலை 5 மணிக்கே அழகிரி அண்ணன் போன் செய்து சொல்லிவிட்டார். அவர் கூறியதால் தான் வந்தோம். அவர் வருவது முன்கூட்டியே தெரியும்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் அவரது ஆதரவாளர் எம்.எல்.ராஜ்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் அவரது ஆதரவாளர் எம்.எல்.ராஜ்

கேள்வி: அழகிரியை தவிர்த்து உங்களிடம் உதயநிதி எதுவும் பேசினாரா?

எம்.எல்.ராஜ்: இல்லை, நாங்களும் பேசவில்லை, அவர்களும் பேசவில்லை. அண்ணன் சொன்னதால் நாங்கள் வந்தோம், உதயநிதியும் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். இரவு 10 மணி வரை உதயநிதி இருந்தார், அதன் பின் புறப்பட்டு விட்டார், நாங்களும் அதன் பின் வந்துவிட்டோம்.

கேள்வி: உள்ளூர் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அங்கு வரவில்லையே?

எம்.எல்.ராஜ்: வரமாட்டாங்க சார். அமைச்சர் அன்பில் மகேஷ் வந்தார். மரியாதை நிமித்தமாக வந்து பார்க்கும் போது, முதலில் எல்லாரும் வருவார்களா? இருக்கும், இனி அடுத்தடுத்து நிகழ்வுகளை பார்ப்போம்.

கேள்வி: இத்தனை நாள் சென்று பார்க்காமல், திடீரென போய் சந்தித்தால் நன்றாக இருக்காது என்பதால் உள்ளூர் நிர்வாகிகள் தவிர்த்துவிட்டார்களா?

எம்.எல்.ராஜ்: இதுல என்ன சார் தயக்கம்? அவர் என்ன புதுசாவா வருகிறார்? ஏற்கனவே பயணம் செய்த ஆள் தானே அழகிரி அண்ணன். அதெல்லாம் எதுவும் இல்லை.

கேள்வி: இந்த சந்திப்பு, அடுத்து ஒரு சுமூகமான உறவுக்கு வழிவகுக்கும் என நினைக்கிறீர்களா?

எம்.எல்.ராஜ்: அது நடந்தால் எல்லாருக்கும் நல்லது தான், சந்தோசம். ஒற்றுமையாக இருந்து செய்வது என்பது நல்லது தானே.

கேள்வி: இணக்கமாக போகுமாறு அழகிரியிடம் நீங்கள் யாரும் வழியுறுத்தினீர்களா?

எம்.எல்.ராஜ்: அந்த பேச்சுக்கே இன்னும் வரவில்லை சார். மரியாதை நிமித்தமாக எங்களை அழைத்து, உதயநிதியிடம் அறிமுகப்படுத்தினார். தனித்தனியாக எங்களை அழகிரி அண்ணன் அறிமுகம் செய்து வைத்தார். உதயநிதி உடன் தனித்தனியாக நாங்கள் போட்டோ எடுத்துக் கொண்டோம். மற்றபடி அந்த பேச்சுக் கட்டத்திற்கு இன்னும் வரவில்லை.

கேள்வி: அந்த கட்டத்திற்கு போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

எம்.எல்.ராஜ்: இருக்கலாம்… அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதே நடக்கட்டும் சார், அடுத்தடுத்து நிகழ்வுகள் நல்லதாகவே இருக்கட்டும். பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது என்று.

கேள்வி: தெற்கில் திமுகவிற்கு வலுமான தலைமை தேவைப்படுகிறது, உரிமையாக நின்று கட்சியை வழிநடத்த ஒருவர் தேவைப்படுகிறார் என்கிற பார்வை திமுகவில் இருக்கிறதா?

எம்.எல்.ராஜ்: உண்மை, உண்மை. கட்சி உழைப்பில், களப்பணியில் அண்ணன் அழகிரியின் உழைப்பு பயங்கரமானது. கடினமான உழைப்பாளி. அண்ணனுடன் நாங்கள் தொடர்ந்து பயணித்திருக்கிறோம். தேர்தலில் பணியாற்றியிருக்கிறோம். அழகிரி அண்ணனிடம் ஒரு குணம் உண்டு. கடுமையாக உழைத்தால் தான் அவரிடம் நிற்க முடியும். கட்சிக்காக உழைப்பவர்கள் மீது அவரும் மரியாதை வைப்பார். தேர்தல் பணிகளில் அழகிரி உடன் ஈடுகொடுக்க முடியாது. மீண்டும் இடைவெளி வராமல் இருப்பது, எல்லாருக்கும் நல்லது. அடுத்து வருவது நல்லதாகவே நடக்கட்டும்,’’
என்று அந்த பேட்டியில் எம்.எல்.ராஜ் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்