தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  3 Missing School Students Rescued Near Nilakottai, Dindigul District

தனிப்படை அமைத்து தேடிய போலீஸ்: தயிர் சாதம் சாப்பிட்டு தலைமறைவான சிறுவர்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 02, 2023 12:13 PM IST

பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல், ‘கட்’ அடித்து வெளியே சென்றதும், முருக பக்தர்களிடம் அன்னதானமாக பெற்ற தயிர் சாதத்தை வாங்கி உண்ட பின், அங்குள்ள மடத்தில் அவர்கள் அயர்ந்து உறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

நிலக்கோட்டை போலீசார் மீட்ட சிறுவர்கள் சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி
நிலக்கோட்டை போலீசார் மீட்ட சிறுவர்கள் சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் திவாஸ் (12) இவர் மைக்கேல்பாளையம் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் செல்வம் என்பவரது மகன் பரத்பாண்டி (12) இதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய மற்றொரு நண்பர் இதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சக்திவேல் (10) இவர் மைக்கேல்பாளையம் அருகே உள்ள சங்கால்பட்டி நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மாணவர்கள் திவாஸ், பரத்பாண்டி, சக்திவேல் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள், ஒன்றாக விளையாடுவார்கள். இந்த மாணவர்கள் மூன்று பேரும், நேற்று காலை வழக்கு போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைடைந்த பெற்றோர்கள், பள்ளிக்குச் சென்று மற்ற மாணவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் காலையில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை என, தெரிவித்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவர்கள் வெளியில் எங்கும் சென்று விட்டார்களா? அல்லது மாணவர்களை யாராவது கடத்தி சென்று விட்டார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சந்தேகித்த நிலக்கோட்டை காவல்துறையினர், 12 பேர் கொண்ட தனிப்படை அமைத்து மாணவர்களை தேடி வந்தனர். 

செம்பட்டி, வத்தலக்குண்டு,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,பழனி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையில் விடிய விடிய தேடியதில் அந்த மாணவர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களிடம் அன்னதானமாக தயிர் சாதம்  வாங்கி சாப்பிட்டு விட்டு, பக்கத்து ஊர் சாலையோர மடத்தில் இரவு முழுவதும் தூங்கியது தெரியவந்தது. 

 மறுநாள் காலையில் மாணவர்களை கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்களை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல், ‘கட்’ அடித்து வெளியே சென்றதும், முருக பக்தர்களிடம் அன்னதானமாக பெற்ற தயிர் சாதத்தை வாங்கி உண்ட பின், அங்குள்ள மடத்தில் அவர்கள் அயர்ந்து உறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தங்கள் குழந்தைகள் திரும்ப வந்த மகிழ்ச்சியில் பெற்றோர்,ஆனந்த கண்ணீர் வடித்தனர். தனிப்படை அமைத்து தேடிய போலீசார், என்ன சொல்வது என தெரியாமல் திரும்பிச் சென்றனர். 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்