தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rugby World Cup: குரூப் சுற்று நிறைவு.. ஒரே ஒரு வெற்றியுடன் வெளியேறியது போர்ச்சுகல் அணி

Rugby World Cup: குரூப் சுற்று நிறைவு.. ஒரே ஒரு வெற்றியுடன் வெளியேறியது போர்ச்சுகல் அணி

Manigandan K T HT Tamil
Oct 09, 2023 11:29 AM IST

ரக்பி உலகக் கோப்பை என்பது சிறந்த சர்வதேச அணிகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆண்கள் ரக்பி யூனியன் போட்டியாகும்.

ஃபிஜி அணியை போர்ச்சுகல் வீழ்த்தியது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அதன் ஆதரவாளர்கள்(Photo by CHARLY TRIBALLEAU / AFP)
ஃபிஜி அணியை போர்ச்சுகல் வீழ்த்தியது. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அதன் ஆதரவாளர்கள்(Photo by CHARLY TRIBALLEAU / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ரக்பி உலகக் கோப்பை செப்டம்பர் 9ம் தேதி முதல் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ம் தேதி பைனல் போட்டி நடைபெறவுள்ளது.

ரக்பி உலகக் கோப்பை என்பது சிறந்த சர்வதேச அணிகளுக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆண்கள் ரக்பி யூனியன் போட்டியாகும்.

இந்த போட்டியை ரக்பி விளையாட்டின் சர்வதேச நிர்வாக அமைப்பான உலக ரக்பி நிர்வகிக்கிறது. வெற்றியாளர்களுக்கு வெப் எல்லிஸ் கோப்பை வழங்கப்படுகிறது, வில்லியம் வெப் எல்லிஸ் தான் ரக்பி விளையாட்டை கண்டுபிடித்தவர்.

கடந்த 1987-ம் ஆண்டு நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இணைந்து முதல் ரக்பி உலகக் கோப்பை போட்டியை நடத்தின. நான்கு நாடுகள் கோப்பையை வென்றுள்ளன; நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மூன்று முறையும், ஆஸ்திரேலியா இரண்டு முறையும், இங்கிலாந்து ஒரு முறையும் வென்றுள்ளன. 2019 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா நடப்பு சாம்பியனாக உள்ளது.

கடந்த முறை ஜப்பான் இப்போட்டித் தொடரை நடத்தியது. இம்முறை பிரான்ஸ் நடத்துகிறது. இது 10-வது உலகக் கோப்பை ரக்பி தொடர் ஆகும். மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

4 குழுக்களாக பிரிக்கப்பட்ட ஒரு குழுவுக்கு தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஆட்டத்தில் குழு பிரிவில் தலா ஒரு முறை தங்களுக்குள் மோதி முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

அந்த வகையில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஃபிஜி, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, அர்ஜென்டினா, வேல்ஸ் ஆகிய 8 அணிகள் முன்னேறியுள்ளன.

இன்று குரூப் பிரிவில் நடந்த கடைசி ஆட்டத்தில் ஃபிஜி-போர்ச்சுகல் அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் 24-23 என்ற கணக்கில் போர்ச்சுகல் ஜெயித்தது.

காலிறுதி அக்டோபர் 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் வேல்ஸ்-அர்ஜெந்டினா மோதுகிறது. இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸில் ரக்பி உலகக் கோப்பை திருவிழா நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்