தமிழ் செய்திகள்  /  Sports  /  Mumbai Indians Women Won By 7 Wkts And Became Champion Of First Wpl 2023

WPL 2023: முதல் சாம்பியன் ஆனது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்!

Manigandan K T HT Tamil
Mar 26, 2023 10:47 PM IST

MIW vs DCW: WPL பைனலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது.

சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்
சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (@mipaltan)

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் விளையாடிய மெக் லேனிங் தலைமையிலான டெல்லி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் மும்பை இந்தியன்ஸ் முதல் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் சாம்பியன் ஆகும் என்ற நிலையில் விளையாடியது.

அந்த அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டபிள்யூபிஎல் கிரிக்கெட்டில் முதல் சாம்பியனாக உருவெடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலே மாத்யூஸ் 13 ரன்களிலும், யஸ்திகா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிதானமாக விளையாடி 39 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். பிரண்ட் அரை சதம் விளாசினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 60 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

மெலி கெர் 14 ரன்கள் எடுத்தார். வின்னிங் ஷாட்டைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் மைதானம் நோக்கி ஓடிவந்தனர் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள். மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ரசிகர்களும், ரசிகைகளும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

டெல்லி தரப்பில் ராதா யாதவ், ஜெஸ் ஜொனாசென் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முன்னதாக, மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் ஷஃபாலி வர்மாவும், மெக் லேனிங்கும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2வது ஓவரில் வோங் வீசிய ஃபுல் டாஸ் பந்தை தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா.

நோ பாலாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி மெக் லேனிங் நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து, மூன்றாவது நடுவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. வீடியோவில் ரீப்ளே செய்து பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.

இதையடுத்து, களம் புகுந்த அலைன் கேப்சி டக் அவுட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடி வந்தார் மெக் லேனிங்.

ஒருகட்டத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் ஒன்றன் பின் ஒன்றாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மெக் லேனிங்கும் 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.

இதனால், டெல்லி அணி மூன்றிலக்க ஸ்கோரை எட்டுவதற்கே தடுமாறியது.

மெல்லி கெர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வோங் 3 விக்கெட்டுகளையும், ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார். டபிள்யூபிஎல் போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெத் ஓவர்களில் ஷிகா பாண்டே நின்று விளையாடினார். பவுண்டரிகள், சிக்ஸ் என பறக்க விட்டு டெல்லியின் ஸ்கோரை 100 ஐ கடக்க உதவினார்.

மறுபக்கம் ராதா யாதவும் சிறப்பாக விளையாடினார். கடைசி வரை நின்று விளையாடிய இருவரும், பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஷிகா பாண்டே 17 பந்துகளில் 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளில் 27 ரன்களையும் விளாசினர்.

இவ்வாறாக 20 ஓவர்களில் 131 ரன்களை சேர்த்தது டெல்லி.

முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இஷான் கிஷன் ஆகியோர் wpl பைனலைக் காண மும்பை ஸ்டேடியத்திற்கு வந்தனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்