தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sri Lanka: கச்சத்தீவு விவகாரம்-தமிழர்களை நடத்திய விதம் மிகவும் கேவலமானது

Sri Lanka: கச்சத்தீவு விவகாரம்-தமிழர்களை நடத்திய விதம் மிகவும் கேவலமானது

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2023 03:49 PM IST

இந்திய அரசாங்கத்தினால் கச்சதீவு திருவிழா வுக்கு வருபவர்களுக்காக 4 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் செலுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வழங்கப்படவில்லை. இந்த ஏற்பாட்டை கடற்படையே செய்திருந்தது

புத்தர் சிலை
புத்தர் சிலை

ட்ரெண்டிங் செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சதீவையும் விட்டு வைக்காது அங்கே பெரிய புத்தர்சிலையொன்றை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் அவர் மேலும் குறிப்பிட்ட தாவது : பொருளாதார மீட்சியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இந்தியாவின் ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

கடந்த 3, 4ஆம் தேதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்ற போது. தமிழ்நாட்டிலிருந்து 2281 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கச்சதீவு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சதீவை இலங்கைக்கு வழங்கும் போது அந்த ஆலயத்துடனேயே வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பக்தர்களை நடத்திய விதம் மிகவும் கேவலமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தினால் கச்சதீவு திருவிழா வுக்கு வருபவர்களுக்காக 4 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் செலுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வழங்கப்படவில்லை. இந்த ஏற்பாட்டை கடற்படையே செய்திருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து கச்சதீவு வந்த அனைவரையும் தனியொரு கடற்படை உத்தியோகத்தரே பதிவை மேற்கொண்டுள்ளார்.

4 மணி நேரங்கள் கடற்கரையில் இருந்தே ஆலயத்திற்கு அவர்களுக்கு செல்ல முடியுமாக இருந்தது. இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென்றால் இது கண்டிக்கத்தக்கது.

கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் அது அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருகின்றன. படையினரால் கச்சதீவில் மிகப்பெரிய புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது. கச்சதீவையும் விட்டுவைக்காத நிலைமையே இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன். இதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று பதில் வரலாம். கச்சதீவு திருவிழாவின்போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்தும் வடக்கு, கிழக்கில் இருந்தும் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை" என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்