NEET exam issue: ’நீட் விவகாரம்! கல்வி மாஃபியாக்கள் உடன் அரசு இயந்திரம் கூட்டு!’ பாஜகவை விளாசும் ராகுல் காந்தி!
NEET exam issue: கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்தக் வினாத்தாள் கசிவு தொழிலை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில், சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவு பிரச்னையில் இருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.
நீட் தேர்வில் உங்கள் குரலாக மாறுவேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நீட் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர், ”நரேந்திர மோடி இன்னும் பதவியேற்கவில்லை, நீட் தேர்வில் நடந்த ஊழல் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் பேரழிவுக்கு உட்படுத்தி உள்ளது.
ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆனால் வினாத்தாள் கசிவு தொடர்பான வாய்ப்புகளை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
கல்வி மாஃபியா மற்றும் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்தக் வினாத்தாள் கசிவு தொழிலை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில், சட்டம் இயற்றுவதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவு பிரச்னையில் இருந்து விடுவிப்பதாக உறுதி அளித்தோம்.
இன்று, நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
நீட் தேர்வு என்றால் என்ன?
இளங்கலை நீட் தேர்வு என்பது MBBS, BDS, BAMS, BSMS, BUMS, BHMS மற்றும் BSc நர்சிங் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முதலிடம்
கடந்த மே 5ஆம் தேதி அன்று 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையில் இடம் பெற்று உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளது.
தேசிய தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேசிய தேர்வு முகமை, இதில் எந்த முறைகேடும் இல்லை என்றும், NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களும், தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்களும்தான் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குக் காரணம் என்று விளக்கம் அளித்து இருந்தது.
நீட் தேர்வு முடிவுகளுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு
இதுகுறித்து மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறுகையில், "நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எந்த மாணவர்களும் மாநிலத்தில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேராத வகையில் நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ளன" என குற்றம்சாட்டி உள்ளார்.
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய கோரிக்கை
தொடர்ந்து பேசிய அவர், பல மாணவர்களின் பெற்றோர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கோரி தன்னை அணுகியதாகவும், இது மகாராஷ்டிராவுக்கு அநீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபற்றி என்எம்சியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம், நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.