தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Wayanad: 'ராகுல் காந்தி இல்லாத உணர்வை ஏற்படுத்தமாட்டேன்’: வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பிரியங்கா காந்தி

Wayanad: 'ராகுல் காந்தி இல்லாத உணர்வை ஏற்படுத்தமாட்டேன்’: வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பிரியங்கா காந்தி

Marimuthu M HT Tamil
Jun 17, 2024 09:07 PM IST

Wayanad: ராகுல் காந்தி இல்லாத உணர்வை ஏற்படுத்தமாட்டேன் என வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கப்போகும் பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.

Wayanad: 'ராகுல் காந்தி இல்லாத உணர்வை ஏற்படுத்தமாட்டேன்’: வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பிரியங்கா காந்தி
Wayanad: 'ராகுல் காந்தி இல்லாத உணர்வை ஏற்படுத்தமாட்டேன்’: வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பிரியங்கா காந்தி (PTI)

Wayanad: கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். 

ரேபரேலி தொகுதியில் அண்ணன், வயநாட்டில் தங்கை:

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் வி.ஐ.பி. வேட்பாளரான ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 

இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்வார் என்றும்; அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. இது பிரியங்கா காந்திக்கு முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. 

ட்ரெண்டிங் செய்திகள்

ரேபரேலி தொகுதி, ராகுல் காந்தி குடும்பத்தினரின் கோட்டையான நிலையில், வயநாடு தொகுதியையும் அவ்வாறு மாற்ற பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

’கடினமாக உழைப்பேன்’: பிரியங்கா காந்தி:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர், பிரியங்கா காந்தி, "வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ராகுல் காந்தி வயநாட்டில் இல்லாததை அந்தப் பகுதி மக்கள் உணர அனுமதிக்கமாட்டேன். 

அவ்வளவு நான் கடினமாக உழைப்பேன். அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யவும், ஒரு நல்ல பிரதிநிதியாகவும் இருக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். ரேபரேலி மற்றும் அமேதியுடன் எனக்கு மிகவும் பழைய அற்புதமான உறவு இருக்கிறது. அதை உடைக்க முடியாது. நானும் ரேபரேலியில் இருக்கும் என் அண்ணனுக்கு உதவி செய்வேன். நாங்கள் இருவரும் ரேபரேலி மற்றும் வயநாட்டில் தொடர்ச்சியாகப் பயணிப்போம்’’ எனப் பிரியங்கா காந்தி மேலும் கூறினார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று  மக்களவைத் தேர்தல் 2024ன் போது அறிவிக்கப்பட்டார். 

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ராகுல் காந்தி ஒரு தொகுதியை காலி செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டுடனும் தனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பதால் இது ஒரு கடினமான முடிவு என்று கூறியிருக்கிறார்.

மேலும் ராகுல் காந்தி பேசுகையில், "வயநாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்த கடந்த ஐந்து ஆண்டுகள் மிகவும் அருமையான மற்றும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மிகவும் கடினமான நேரத்தில் போராடுவதற்கான ஆதரவையும், ஆற்றலையும் வயநாடு மக்கள் எனக்கு அளித்தனர். அதை நான் மறக்கவே மாட்டேன்.

நான் தொடர்ந்து வயநாட்டுக்குச் செல்வேன். வயநாட்டுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.