தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence : மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக அதிகரிப்பு!

Manipur Violence : மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக அதிகரிப்பு!

Divya Sekar HT Tamil
May 07, 2023 12:25 PM IST

மணிப்பூர் கலவரத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அந்த மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ஏழு மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. மாநிலத்தின் சில பகுதிகளில் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சவரசந்த்பூர், இம்பால், காங்போக்பி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அங்கிருந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியினர் அல்லாதவருக்கும், பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ அலுவலர்கள் கலவரம் வராமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். காவல்துறையினரும் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு அம்மாநில ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்திலுள்ள லாம்பேலில் இருக்கும் மருத்துவ அறிவியல் நிறுவனம் 23 பேர் இறந்ததாக அறிவித்திருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 54-ஆக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வன்முறை மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்