தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Why Noise Inside Ears Always

காதுக்குள் எப்போதும் ரிங்காரம் அடிக்கிறதா?

I Jayachandran HT Tamil
Jan 28, 2023 02:55 PM IST

கேட்பது இசையா, இரைச்சலா என நாம் உணர்ந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட காதுக்குள்ளேயே இரைச்சல் ஏற்படுவது பலருக்கும் பெருந்தொல்லையாக இருக்கும். அதற்குக் காரணங்களைப் பற்றி இங்கு காணலாம்.

காதுக்குள் இரைச்சல்
காதுக்குள் இரைச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

தனிமையில் இருக்கும் சிலர், காதுக்குள் ஏதோ ஒரு ஒலியைக் கேட்டு, அதனால் மிரட்சி அடைந்து, முகம் வெளிறி அமர்ந்திருப்பார்கள். காதுகள் தான் இவர்களின் பிரச்னை.

காதுகளுக்குள் கேட்கும் ஒலிகள், இவர்களின் நிம்மதியை கெடுத்து, எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல், தவித்து நிற்க வைக்கிறது.

காது இரைச்சல் என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு.

காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம். சில மனநோயாளிகள்கூட காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாக கூறுவார்கள்.

காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும். சிலருக்கு காணப்படும் இந்த பாதிப்புகள், பல்வேறு சப்தங்களை காதினுள் கேட்க வைக்கும்.

விமானத்தின் ஓசையைப் போன்றோ,கடல் அலைகளின் இரைச்சலைப் போன்றோ, வாகனங்களின் ஒலியைப் போன்றோ, யாராவது பேசிக் கொண்டிருப்பது போன்றோ அல்லது கூட்ட இரைச்சலோ எதோ ஒன்று, அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அவ்வாறு கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம். இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும்.

ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும்.

சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும்.

ஆயினும், இரவு நேரங்களில், நிசப்தமான வேளைகளில், கடிகாரத்தின் விநாடி முள்ளின் நகர்வே, பெரும் ஓசையாகக் கேட்கும்

அந்த நேரத்தில் காதில் ஒலிக்கும் சப்தத்தின் பேரொலி, அவர்களை மிகவும் அச்சுறுத்தும்.

எங்கும் அமைதி நிலவும் அந்த வேளையில் அதிக இரைச்சல் உள்ள மார்க்கெட்டில் நிற்பது போன்ற சப்தங்களைக் கேட்டால், எப்படி இருக்கும்?

சமயங்களில், உண்மையாகவே, எங்காவது அருகில், அது போன்ற சத்தங்கள் வருகிறதா, என்று உன்னிப்பாக வெளிப்புற ஒலிகளைக் கேட்க எண்ணும் போது, காதுக்குள் ஒலிக்கும் சத்தத்தின் அளவு இன்னும் கூடுதலாகி, மனதின் அமைதியை பாதிக்கும்.

இது மனக்குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். உடல் சோர்வாக இருக்கும். காது இரைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு.

அவற்றை தற்காலிக காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம்.

காதுகளில் ஏற்படும், அழுக்கினாலும், எப்போதும் ஹெட்போனில் அதிக ஒலி அளவை உடைய பாடல்களைக் கேட்பதாலும்,

மொபைலில் ஹெட் செட்டை இணைத்துக் கொண்டு, எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதாலும், இயல்பாகவே காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கும், சில சமயங்களில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்

காதுமடலை சேர்த்து சிறு துவாரமாக காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாக சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகி காதை அடைத்துக் கொண்டால் அல்லது அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக் கொண்டால், பூஞ்சை தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை. காதில் உள்ள அழுக்கை அயல் பொருளை அகற்றி விட்டால் அல்லது காளான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று விட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம்.

ஜலதோஷம் பிடித்தால் கூட சில நேரங்களில் தற்காலிகமாக காது இரைச்சல் உண்டாகும். அதே நேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகி விடும் .

முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக்காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். வயதிற்கு ஏற்ப காதுக்கு ரத்த ஓட்டம் குறைவதால் காது சத்தம் ஏற்படுகிறது.

வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்து விட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது போன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக் கொண்டால், சீழ் பிடித்து விட்டால் காது இரைச்சல் ஏற்படும் (Ear noise can occur if pus is caught).

நடுக்காதில் தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன.

இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ எனும் நோய் தாக்கும் போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்கு செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும்.

அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது மூக்கு தொண்டைக்குழாய்’ அழற்சி அடைந்து, வீங்கிக் கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்த பிரச்னை ஏற்படலாம்.

WhatsApp channel